அத்துடன் இது வடக்கு கரையிலிருந்து சுமார் 120 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் நகர்ந்து தமிழ் நாட்டின் தென் கரையை ஊடறுத்து செல்லும்.

இதன் தாக்கத்தினால் வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும், அத்துடன் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசுவதுடன் பலத்த மழை பெய்யக் கூடும்.

யாழ் குடா நாட்டில் மணித்தியாலத்திற்கு 80 தொடக்கம் 90 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் 100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும். இதன் காரணமாக வட மாகாணத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்தளம், மன்னார், திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, இரத்தினபுரி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் காற்றானது 100 கிலோ மீற்றர் வரை உயரக் கூடும். மேலும் யாழ் குடா நாட்டில் மாலை அல்லது இரவு வேளையில் 150 மில்லி மீற்றரிலும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகும்.

இவ்வாறு காற்றின் வேகம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தழிப்புடன் காணப்படும். அத்துடன் முல்லைத்தீவிலிருந்து காங்கேசன் துறை வரையான ஆழம் கூடிய கடற்பரப்புக்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.