முதல் உலகப்போர் நிறைவு நூற்றாண்டு தினம் – பாரீஸ் நகரில் உலக தலைவர்கள் அணிவகுத்தனர்

262 0

முதல் உலகப் போர் நடந்து முடிந்து 100 ஆண்டுகள் நிறைவு அடைந்தது. அதையொட்டி பாரீசில் நடந்த விழாவில் உலக தலைவர்கள் அணிவகுத்தனர்.

உலகைப் புரட்டிப்போட்ட வரலாறு, முதல் உலகப் போருக்கு சொந்தம்.

நேச நாடுகளான பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒரு தரப்பிலும், மைய நாடுகளான ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகியவை எதிர் தரப்பிலும் நின்று போரிட்டன.

இந்தப் போரில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்த இந்தியாவும் கலந்து கொண்டது. இந்திய தரப்பில் கிட்டத்தட்ட 20 லட்சம் வீரர்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று போரிட்டனர்.

இந்தப் போரில்தான் முதன் முதலாக நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. விமானம்தாங்கி போர்க்கப்பல்கள் இந்த போரின்போதுதான் அறிமுகமாயின. குதிரைப்படை, யானைப்படை என்றெல்லாம் இருந்த நிலையை மாற்றியது இந்தப் போர்தான்.

1914-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி தொடங்கிய இந்தப்போர், 1918-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 11-ந் தேதி முடிவுக்கு வந்தது.

இந்தப் போரில் 97 லட்சம் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 1 கோடி அப்பாவி மக்களும் பலியாகினர்.

அந்த வகையில் உலகப்போர் முடிவுக்கு வந்து 100 ஆண்டுகள் ஆகி உள்ளன.

இந்த 100 ஆண்டு நிறைவை கொண்டாடும் விழாக்கள் உலகமெங்கும் நடந்தன.

இருப்பினும் பிரான்ஸ் தலைநகர் பாரீசில்தான், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட ஏறத்தாழ 70 உலக நாடுகளின் தலைவர்கள் அணிவகுத்த பிரமாண்ட விழா நடந்தது.

முதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பேச்சு வார்த்தை, பாரீஸ் நகரில் ஒரு சொகுசு ரெயிலில் நடைபெற்றது. அதை நினைவுகூரும் விதத்தில்தான் உலகப்போர் நிறைவு 100 ஆண்டு நினைவு தினம், அங்கு சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்த விழாவில் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான், “அமைதிக்காக உலக தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “ஒருவருக்கு ஒருவர் எதிராக அச்சம் கொண்டிருப்பதைவிட, நாம் நம்பிக்கை வளர்ப்போம்” என்று முழங்கினார்.

முன்னதாக முதல் உலகப்போரில் வீர மரணம் அடைந்த 74 ஆயிரம் இந்திய வீரர்களின் நினைவாக பிரான்சில் லாவென்டீ நகரில் நிறுவப்பட்டுள்ள 7 அடி உயர வெண்கல சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நகரில்தான் கடைசியாக 2 இந்திய வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என்பது வரலாற்றுத் தகவலாக அமைந்துள்ளது.

இதே போன்று பிரான்சில் இந்திய வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடங்களில் மேலும் 56 சிலைகள் நிறுவப்படுகின்றன.

இந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்தியா நேரடியாக பங்கேற்காத போர் இது. ஆனால் அமைதிக்காக நமது வீரர்கள் போரிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பயங்கரமான முதல் உலகப்போர் முடிந்து 100 ஆண்டுகள் ஆகி விட்டன. உலக அமைதிக்காக இந்த நாளில் வலியுறுத்துகிறோம். நல்லிணக்கமும், சகோதரத்துவமுமான ஒரு சூழலை உருவாக்குவதற்கு இந்த நாளில் உறுதி ஏற்போம்” எனவும் அவர் சூளுரைத்தார்.

Leave a comment