ஜனாதிபதியின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணில்லை-

415 0

நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின்படிக்கு ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்ற கருத்துக்களே பலம் பெற்றுள்ளன.

பாராளுமன்றத்தைக் கலைத்தமை ஜனாதிபதிக்கு அரசியல் அமைப்பில் கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் படியே ஆகும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சட்டத்தரணி ராஜா குணரத்ன தெரிவித்தார்.

தனியார்  ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்காக ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என சட்டத்தரணி ராஜா குணரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தைக் கலைப்பது அடிப்படை உரிமை மீறலாக அரசியல் யாப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அரசியல் அமைப்பில் அடிப்படை உரிமை எனக் கூறப்பட்ட ஒன்று மீறப்பட்டாலேயே உயர் நீதிமன்றத்தில் நேரடியாக மனுத் தாக்கல் செய்யலாம்.

ஒரு பிரஜைக்குள்ள அடிப்படை உரிமைகள் என்ன என்பது பற்றி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு உரிமையும் பாராளுமன்றத்தைக் கலைப்பதனால் மீறப்படுவதாக எங்கும் கூறப்படவில்லை.

அடிப்படை உரிமை மீறல் தவிர்ந்த வேறு ஒரு விடயத்துக்காக உயர் நீதிமன்றத்தில் நேரடியாக மனுத் தாக்கல் செய்ய முடியாது. வேறு நீதிமன்றங்களின் ஊடாக வர முடியுமாக இருக்கும்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி நான்கரை வருடங்களை கடக்கும் வரையில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லையென கூறப்படும் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தமை குறித்தும் ராஜா குணரத்ன இதன்போது விளக்கம் அளித்தார்.

அரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரையை மறுசீரமைப்பதன் மூலமே 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. 70 ஆவது உறுப்புரையில் பாராளுமன்றத்தின் சபை ஒழுங்குகள் குறித்தே குறிப்பிடப்பட்டுள்ளன. 70 ஆவது உறுப்புரையில் 7  பிரிவுகள் உள்ளன. இதில், 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் முதலாவது பிரிவே மாற்றம் செய்யப்பட்டது. இந்த முதலாவது பிரிவில் உப பிரிவுகள் மூன்று காணப்படுகின்றன.

இந்த 70 ஆவது உறுப்புரையில் காணப்படும் ஏனைய 6 பிரிவுகளும் எந்தவித மாற்றங்களுக்கும் உட்படுத்தப்பட வில்லை. ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு அதிகாரம் உண்டு எனக் கூறும் சட்டம் 70 ஆவது உறுப்புரையில் 3 பிரிவில் 2 உப பிரிவில் அமையப் பெற்றுள்ளது. இந்த விடயம் எந்த முறையிலாவது 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த அதிகாரத்தை வைத்தே ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment