அலரி மாளிகைக்கு எதிரான பலத்தை திங்கட்கிழமை காண்பிப்போம்-ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள்

208 0

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையினை நாங்கள் வரவேற்கின்றோம்.

எமது தேவைகளைக் கருத்திற்கொள்ளாது செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாகவும் தொழிற்சங்கங்களின் பலத்தினை நிரூபிக்கும் வகையில் எதிர்வரும் 12ஆம் திகதி ‘நாட்டைப் பாதுகாப்பதற்கான உழைக்கும் மக்களின் பலம்” எனும் தொனிப்பொருளில் சுகததாச விளையாட்டரங்கில் ஒன்றுகூடவுள்ளோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இன்று  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

கடந்த மூன்று வருடங்களாக அனைத்துத்துறை சார்ந்த தொழிலாளர்களும் வீதிகளில் இறங்கித் தமது தேவைகளுக்காகப் போராடி வருகின்றனர்.

தேசிய அரசாங்கத்தில் எமது தேவைகள் எவையும் பூர்த்தி செய்யப்படவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது எமது பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வளிக்கப்பட்டது எனக் கூறமுடியாவிடினும், அவர் எமது தேவைகள் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடினார்.

எனவே தற்போது மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக்கப்பட்டுள்ளமையினை வரவேற்கின்றோம்.

அத்தோடு எதிர்வரும் 12ஆம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் தொழிற்சங்கங்களின் பலத்தை வெளிக்காட்டும் வகையிலும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கும் வகையிலும் ஒன்றுகூடவுள்ளோம் என்றார்.

Leave a comment