ஆசியா பீவி விடுதலை விவகாரம் – டிஎல்பி கட்சியின் போராட்டம் வாபஸ்

235 0

ஆசியா பீவி விடுதலைக்கு எதிராக போராட்டம் நடத்திய டிஎல்பி கட்சியினருடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், அசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆசியா பீவியும் அவரது குடும்பத்தினரும் தற்போது பாகிஸ்தானில் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் இஸ்லாமிய கட்சியான தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி நிர்வாகிகளுடன் நேற்று இரவு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். சீராய்வு மனுவுக்கு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டதையடுத்து, 5 அம்சங்கள் கொண்ட உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.  பேச்சுவார்த்தையின் முடிவில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தர்ணா போராட்டத்தை திரும்ப பெறுவதாக டிஎல்பி கட்சி அறிவித்தது. போராட்டம் நடத்தி வரும் தொண்டர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசெல்லும்படி கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

மறு சீராய்வு மனு விசாரணை முடியும்வரை, நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் (இசிஎல்) ஆசியா பீவி பெயரை அரசு சேர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு உடனே எடுக்கும்.

Leave a comment