`உலகம் அவளைக் கொன்றுவிட்டது!’ – நம் கண்முன்னே பஞ்சத்தால் ஏமன் அழியும் நிலை #Yemen

4877 0

உள்நாட்டுப்போரால் சிதைந்து வரும் ஏமனின் சூழலையைப் பிரதிபலிக்க இந்த ஒரு புகைப்படம் போதுமானதாய் இருந்தது. உலக நாடுகளின் கவனத்தை ஏமனின் பக்கம் திருப்பிய புகைப்படம் இது. நியூயார்க் டைம்ஸ் நிருபர் எடுத்த இந்தப் புகைப்படத்தில் உலகை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த  தேவதை இன்று இல்லை. ஆம் அமல் ஹுசைன் இறந்துவிட்டாள். இல்லை இல்லை… உலகம் அவளைக் கொன்றுவிட்டது.

ஏமன் அமல்

ஏமன்… உள்நாட்டுப் போரால் உருக்குலைந்து வரும் வளைகுடா நாடு. ஏமன் போரின் பின்னணியைத் தெரிந்துகொள்ள இந்த லின்கை க்ளிக் செய்யவும்… Yemen Crisis

ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படை தொடர் வான்வழித்தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களின் அதிகார மோதலுக்குப் பலியாவது அப்பாவி மக்கள்தான்.

நிருபரின் கண்களில் தென்பட்ட தேவதை.. 

ஏமன் தலைநகர் சனா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. சனாவில் இருந்து 90 மைல் தூரத்தில் அஸ்லாம் என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவ முகாமில்தான் நியூயார்க் டைம்ஸ் நிருபர் அமல் ஹுசைனை பார்த்திருக்கிறார். சதையற்ற உடல். கண்களில் மட்டுமே அசைவு தெரிகிறது.

ஏமன் குழந்தை
அமல் அருகில் அமர்ந்திருந்த அவளின் தாய்க்கும் உடல்நிலை சரியில்லை. டெங்கு காய்ச்சல். அவர்கள் தங்கியிருந்த முகாமில் நிலவும் சுகாதாரமற்ற சூழலே காய்ச்சலுக்குக் காரணம். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள அமலுக்கு மருத்துவர்கள் இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை பால், பழம் உள்ளிட்டவற்றைக் கொடுத்துள்ளனர். ஆனால், அவள் உடல் உணவை ஏற்றுக்கொள்ளவில்லை. வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தாள். அவள் வாழ்வதற்குத் தகுதியற்ற ஒரு சூழலை உருவாக்கிவிட்டு பாலும் பழமும் கொடுத்து என்ன பயன்?

கட்டில் மீது எலும்பும் தோலுமாக படுத்துக் கிடந்த அமல் நிருபரின் மனதை உலுக்கியது. அவளைக் புகைப்படம் எடுத்த நிருபர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அவர் நினைத்ததைவிட அதன் தாக்கம் அதிகமாகவே இருந்தது. புகைப்படமும் வைரலானது. கூடவே அமலின் உடல்நிலை மோசமடைந்தது.

கண்களின் அசைவு நின்றுப்போனது.. 

மருத்துவ முகாமிலிருந்து அவள் தங்கியிருந்த முகாமுக்கு அனுப்பப்பட்டார். காரணம், அங்கு அமல் போன்று ஆயிரக்கணக்கான குழந்தைகள் சிகிச்சை பெற வேண்டும். போதுமான இடவசதியோ மருத்துவ வசதியோ இல்லை. அங்கிருந்து 15 மைல் தூரமுள்ள மருத்துவமனைக்கு அமலைக் கொண்டு செல்லும்படி மருத்துவ முகாமில் அறிவுறுத்தினர். ஆனால், அமல் பெற்றோர்களுக்கு அது சாத்தியமற்றது. எனவே அவர்கள் தங்கியிருந்த முகாமுக்கே அழைத்துச் சென்றனர். அமலின் உடல்நிலை மேலும் மோசமாகியது. தண்ணீரைக்கூட அவள் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. அக்டோபர் 26-ம் தேதி அமலின் கண்களில் இருந்த அசைவும் நின்றுப்போனது. அமலின் தாய்க்கு கதறி அழக்கூட திராணியில்லை.

ஏமன் குழந்தை
அமல் மரணத்தைத் தொடர்ந்து சர்வதேச அமைப்புகள் ஏமன் போரை நிறுத்தும்படி மன்றாடின. அமல் மட்டுமல்ல. ஏமனில் 1.8 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். `உள்நாட்டு போர் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் நம் கண் முன்னே ஏமன் பஞ்சத்தால் அழியும். நம் தலைமுறையினர் பார்க்கும் மோசமான பஞ்சமாக அது இருக்கும்’ என்று எச்சரிக்கிறது ஐ.நா.

ஏமன்

அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் அமெரிக்கா..

அமெரிக்கா, சவுதி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஐ.நா கோரியுள்ளது. `ஈரான் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அளிக்கும் ஆதரவை நவம்பர் 4-ம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும். அதன்பிறகு அமைதி பேச்சுவார்த்தை நடக்கும்’ என்று கெடு விதித்துள்ளது அமெரிக்கா.

மூன்றரை ஆண்டு காலமாக ஏமனைச் சீர்குலைத்து வரும் உள்நாட்டுப்போருக்கு இன்னும் சில தினங்களின் சுமுக தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம். ஆனால், ஏக்கத்துடன் பார்த்த அந்தக் கண்களுக்கு அமெரிக்கா, ஈரான், சவுதி,ஏமன் உள்ளிட்ட நாடுகள் என்ன பதில் சொல்லப்போகின்றன? வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிக எடை பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம். அதன் ஆட்சியாளர்கள் உணவு கிடைக்காமல் பசியின் கொடுமையால் இறந்த அமலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? வளம் கொழிக்கும் பூமியான சவுதி, ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உயிர்விட்ட அமலுக்காகப் போரை நிறுத்துமா?

Leave a comment