பீகார் அரசு மருத்துவமனையில் எலி கடித்து பிறந்த குழந்தை பலி

199 0

பீகார் மாநில அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை எலி கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பீகார் மாநிலத்தில் தர்பங்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நஜ்ரா கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது பிரசவத்துக்கான அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிறந்த ஆண் குழந்தை ஆரோக்கிய பற்றாக்குறை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கம்போல், காலை எழுந்து குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக சென்ற தாய்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிறந்து 8 நாட்களே ஆன அவரது ஆண் குழந்தை சிறு சிறு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது. குழந்தையின் கால்களிலும், உடலின் சில பகுதிகளிலும் எலி கடித்ததற்கான வடுக்களும், உறைந்த இரத்தமும் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், குழந்தைக்கு இதய குறைபாடு இருந்ததினால்தான் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து இருந்ததாகவும், அதனாலேயே குழந்தை இறந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதே சமயம், மருத்துவமனையில், எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்தும் வழி தெரியவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில், அம்மாவட்ட மாஜிஸ்திரேட் இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment