இன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணுவத்தின் பொறுப்பு எனத் தெரிவித்துள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பு அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

கடந்த 26 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட மாற்றம் அரசியல்வாதிகளுக்கிடையேயான அரசியல் மாற்றமாகும். ஆகையினால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பல்ல.

இன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணுவத்தின் பொறுப்பு.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் கலவரங்கள் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும், பொலிஸ் விசேட படையினரும் நடவடிக்கை எடுப்பார்கள். எனினும் அவர்களால் அக் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இராணுவத்தின் உதவியை கோரினால் மாத்திரமே இலங்கை இராணுவம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்.

இந் நிலையில் அவசர நிலைமை ஏற்பட்டால் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கு ஆகக் குறைந்த அதிகாரத்தை இராணுவத்தினர் பயன்படுத்த வேண்டும். அதற்குரிய உபகரணங்களை படையினர் தம் வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.