கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேரும் விளக்கமறியலில்

200 0

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தை கடந்த இரு வார காலமாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்கள் நேற்று (25) பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அம்மாணவர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு அக்கரைப்பற்று மெஜஸ்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்கரைப்பபற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவர்கள் நேற்று மாலை அக்கரைப்பற்று மஜஸ்டேர்ட் நீதி மன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி இவ்வுத்தரவினைப் பிறப்பித்தார்.

பகிடிவதையில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் தகவல் தொழில்நுட்ப பீட மாணவர்கள் சிலருக்கு வழங்கப்பட்டுள்ள வகுப்புத்தடையை நீக்குமாறு கோரி, அதே பீடத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினர் கடந்த இரண்டு வார காலமாக தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாக நிருவாகக் கட்டடத்தினை ஆக்கிரமித்திருந்தனர். இதனால் பல்கலைக்கழக நிருவாக செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிருவாகத்தினரால் அக்கரைப்பற்று மெஜஸ்ரேட் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து பல்லைக்கழக நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு அக்கரைப்பற்று மெஜஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனையும் மீறி, தொடர்ச்சியாக அந்த மாணவர்கள் நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்தமையால், அவர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் திறந்த கட்டளை பிறப்பிருந்தது. இக்கட்டளையின் பிரகாரம் நேற்றைய தினம் அம்மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை குறித்த மாணவர்கள் கைது செய்யப்படவில்லை எனக் கண்டித்து பல்கலைக்கழக நிருவாகத்தினரால் அண்மையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றும் நடைபெற்றது. குறித்த மாணவர்களின் ஆக்கிரமிப்பால் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும் அனைத்துப் பீடங்களின் கல்விச் செயற்பாடுகளும் இடைநிறுத்ப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக நிருவாகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment