தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தீர்க்கப்படாததால் அரசாங்கம் இதில் தலையீட வேண்டும்!

212 0

பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப்பட வேண்டிய பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தீர்க்கப்படாததால் அரசாங்கம் இதில் தலையீட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு முன்வைக்கின்றது.

 

இதனடிப்படையில் நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் இந்த பிரச்சினையை உள்வாங்கி தீர்க்காப்படாவிட்டால் தேசிய பிரச்சினையான இப்பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக உருவாகுவதற்கான சந்தர்ப்பம் உருவாகி வருகின்றது என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அதேநேரத்தில் நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், ஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வராத இடத்தில் இந்த முறை வரவு செலவு வாக்கெடுப்பில் எமது வாக்குகளை நாம் எந்த முறையில் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டிய ஒரு நிலையில் இருக்கின்றோம்.

ஆகவே நாம் அரசுக்கு இன்று கொடுத்து வரும் ஆதரவு தொடருமா அல்லது மறுபரிசீலனை செய்ய முடியுமா என்ற பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளோம்.

அரசாங்கம் இந்த தருணத்தில் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைக்கு ஒரு நல்ல பதிலை கொடுப்பதுடன் கம்பனிகளுக்கும் அழுத்தம் கொடுக்கவும் வேண்டும். போராடுகின்ற தொழிற்சங்கங்களுக்கும் உறுதுணையாக இருக்கவும் வேண்டும். அதேவேளை அரசாங்கம் தொழிலாளர்களின் பக்கத்தில் நினைக்க வேண்டும் என வழியுறுத்த விரும்புகின்றோம்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தீபாவளிக்கு முன் கிடைப்பது சந்தேகத்திற்குரிய விடயமாக இருந்தாலும், தீபாவளிக்கு முற்பணமாக பத்தாயிரம் ரூபாவை தொழிலாளர்களுக்கு வழங்க கம்பனிகள் சம்மதித்துள்ளனர்.

அதேவேளை தீபாவளிக்கு பின் சம்பள பிரச்சினை தீர்க்கப்படுமேயானால் அக்காலப்பகுதிக்கான நிலுவை ஊடான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது எமது கொள்கையாக அமைந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்று தருவதாக கடந்த காலத்தில் கூறி இருப்பது திட்டவட்டமாக எமக்கு தெரியாது. அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவரின் வாக்குறுதி பொய்யான வாக்குறுதியாக நாம் கருதுகின்றோம்.

ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க முடியாது என இன்று கம்பனிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் 600 ரூபாவை மாத்திரம் தருவதாக கூறியிருக்கின்றார்கள். எனவே எமது மக்களின் கோரிக்கையாக ஆயிரம் ரூபா உள்ளதால் அதற்கு சரிசமமான நியாயமான சம்பள உயர்வை வழங்க முதலாளிமார் முன்வர வேண்டும்.

மக்கள் போராட்டங்கள் சில இடங்களில் சுயமாக இடம்பெற்றாலும், பல இடங்களில் அப்போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இம்மக்களின் போராட்டங்கள் அரசியலுக்கு அப்பால் சென்று அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து பேசும் சக்தியை உருவாக்க வேண்டும். இதன் மூலம் இந்த தொழிலாளர்களுக்கு செய்யும் பெரிய உதவியாக இது இருக்கும் என நான் நம்புகின்றேன்.

ஆனால் இந்த விடயத்தில் தொழிற்சங்கங்களுக்கு இடையில் கௌரவ பிரச்சினை உள்ளது. இந்த கௌரவ பிரச்சினையை அகற்றி ஒரு மேசையில் அமர்ந்து கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுத்து சம்பள பிரச்சினையை முடிக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஜனாதிபதியை சந்திக்க முற்பட்டுள்ளனர். ஆனால் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே பதிவுகள் செய்திருக்க வேண்டும். இன்று நாட்டின் ஜனாதிபதிக்கு பிரச்சினைகள் எழுந்துள்ளது. இதனால் பாதுகாப்பும் அதிகரித்துள்ளது.

இது புரியாத நிலையில் புதிதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களால் குழப்ப நிலை தோன்றியுள்ளது. இவ்வாறு தெரிவித்த அவர் எவ்வறாவது தூண்டி விட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்.

அண்மையில் சம்பளம் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்தோம். அவர் தொழில் அமைச்சர் ஊடாக சந்திப்பதற்கு வாய்ப்பை வழங்கினார். தொழில் அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளோம். மேலும், இது தொடர்பாக நாட்டின் பிரதமர் ஊடான சந்திப்பு ஒன்றையும் ஏற்படுத்தவுள்ளோம் என தெரிவித்தார்.

இதன்போது வடமாகாண சபையில் ஆட்சி காலம் நிறைவுக்கு வந்ததன்பின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஷ்வரன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அவருக்கு இந்த தருணத்தில் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து அம்மக்களுக்கு சேவை செய்த அவர் புதிதாக கட்சி அமைத்து மக்கள் சேவையை தொடர இருக்கின்றார்.

இவரின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment