கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் 3 கட்சிகள் கைச்சாத்து!

386 0

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கட்சிகள் இணைவு தொடர்பான ஒப்பந்தத்தில் ஈ.பி.டீ.பி, ரி.எம்.வீ.பி., அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய கட்சிகள் ஒப்பமிட்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் செ. கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஒப்பந்தம் கைச்சாத்திடல் தொடர்பான கலந்தரையாடலை அடுத்து நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே செ. கோபாலகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்த சங்கரி தமது கட்சி இணைந்து கொள்வது தொடர்பில் எங்களது மத்திய குழு கூடி ஆராய்ந்து எடுக்கப்படும் முடிவின் அடிப்படையிலே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னாள் வட கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் ஈழத் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி, ரி.எம்.வீ.பி, ஈ.பி.டீ.பி, அகில இலங்கை தமிழர் மகா சபை, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தில் 3 கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளதாகவும் ஏனைய கட்சிகள் விரைவில் கைச்சாத்திடும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் பின்னரும் கைச்சாத்திட முடியும் என்று கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் மாகாணச் செயலாளர் கலாநிதி சு. சிவரெத்தினம் தெரிவித்தார்.

நேற்றைய இச் சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்த சங்கரி, கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் செ. கோபாலகிருஷ்ணன், ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் செல்வராஜா, அகில இலங்கை தமிழர் மகா சபையின் தலைவர் கலாநிதி கே. விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. கிருஷ்ணப்பிள்ளை, உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

நடைபெற்ற கலந்துரையாடலில் ஈழத் தமிழர் சமூக ஜனநாயக்கட்சி, ரி.எம்.வீ.பி, ஈ.பி.டீ.பி, அகில இலங்கை தமிழர் மகா சபை, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a comment