மாத்தளை உக்குவளைப் பிரதேசத்தில் இறந்த பெண்ணின் சடலம் மீண்டும் தோண்டி எடுப்பு

235 0

அக்குறணை பங்கொல்லாமடையில், மாத்தளை உக்குவளைப் பிரதேசத்தில் இறந்த பெண் ஒருவரின் சடலம் சந்தேகத்தின்பேரில் நேற்று மரண விசாரணைக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

மாத்தளை உக்குவளை பிரதேசத்திலுள்ள வீட்டில்  தீ விபத்தின் போது உயிரிழந்ததாகக் கூறப்படும் மேற்படி பெண்ணின் சடலம் பங்கொல்லாமடயில் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.

38 வயதுடைய முஸ்லிம் பெண்ணின்  மரணம் சம்பந்தமாக சந்தேகம்  இருப்பதாக அப் பெண்ணின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து அவரது சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

கடந்த  செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி குறித்த  மரணம் ஏற்பட்டுள்ளதுடன் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களினால் அக்குறணை பங்கொல்லாமட முஸ்லிம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இருந்த போதும் இவரது மரணம் சந்தேகத்திற்குரியது என்று உறவினர்கள் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டை  அடுத்து பொலிஸார் மாத்தளை நீதிவானின் உத்தரவு பெறப்பட்டது.

ஆனால் குறித்த பெண்ணின் சடலம் கண்டி  மாவட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால் கண்டி நீதிமன்றத்தின்  உத்தரவுக்கு அமைய கண்டி மேலதிக நீதவான் எம்.எச். பரீக்தீனின் முன்னிலையில் மீண்டும்தோண்டி  எடுக்கப்பட்டது.

குறித்த பெண் 17 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளதுடன் சுமார் 10 வருடங்களாக வெளி நாட்டில் வசித்து வந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் சித்தி சாஹிரா மொஹமட் சவாஹிர் என்ற 38 வயதுடைய குடும்பப் பெண் ஆவார்.

இம் மரணம் தொடர்பாக மீண்டும் பிரேத பரிசோதனை ஒன்றை  கண்டி சட்டவைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment