தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் -அனந்தி சசிதரன்

4545 15

தமிழ் தேசிய உணர்வு சிதைந்துள்ளதால், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள தமிழ் தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைத்து, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடைவதற்கான பாதையில் பயணிக்க ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்படுபவர்கள், வெளியேறுபவர்கள், தமக்கான ஒரு கட்டமைப்பினை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இவ்வாறு ஈழத் தமிழர் சுயாட்சி கழக செயலாளர் நாயகம் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

புதிதாக உதயமாகியுள்ள ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்ததின் ஆரம்ப நிகழ்வும் கொள்கைப் பிரகடன வெளியிடும் இன்று (21) யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள யு.எஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

அதில் கொள்கைப் பிரகடன உரையின் போதே அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகளுடன் உள்ள உறுப்பினர்கள், கட்சியில் இருந்து வெளியேற வேண்டும். கூட்டமைப்பில் இருந்து வெளியேறுபவர்கள் அல்லது வெளியேற்றப்படுபவர்கள், இன்னொரு கட்டமைப்பினை உருவாக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

திட்டமிட்ட குடியேற்றம், பேரினவாத சூழ்ச்சிகளின் மத்தியில் வடக்கு – கிழக்கில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் பேராதிக்க ஒடுக்குமுறைகளை இல்லாதொழித்து, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக் கொண்ட அதிகபட்ச சுயாட்சியை வென்றெடுப்பதே பிரதான அரசியல் நோக்கம்.

வடக்கு – கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் உரிமைகள், தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் குறிப்பாகவும், பண்பாட்டு ரீதியில் உறுதியாகவும் இருத்தல் வேண்டும். வடக்கு – கிழக்கிற்கு வெளியில் வாழும் மலைய மக்களின் தேசிய உரிமைகளை உறுதி செய்வதற்கான நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலேயே எமது கட்சி செயற்படும்.

இவ்வாறான செயற்பாட்டுடன் செயற்பட்டால், இன ஒடுக்குமுறைகளை இல்லாதொழித்து சுயாட்சி, சமத்துவம் என்ற அடிப்படையில் இலங்கை வாழ், அனைத்து தேசிய இனங்களிடையேயும் ஐக்கியத்தை வளர்க்க முடியும்.

சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சக்திகளுடனும் ஐக்கியப்பட்டு செயற்படுவோம்.

தமிழ் மக்களின் மாற்றத்திற்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் செயற்படும் அமைப்புகளுடனும், இனப்படுகொலையை வலியுறுத்தும் அமைப்புக்களுடனும், ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், அயல் நாடுகளினதும் மக்களினதும் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்திய அரசு மற்றும் தமிழக மக்களின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் உட்கட்சி ஜனநாயகம், கொள்கை பற்றுதி அதன் கொள்ளைகள் நாளடைவில் மாற்றமடைந்து சென்று மக்களின் தேவைகள் புறக்கணிக்கும் விதமாக வரும் அரசியலை எமது மக்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

கடந்த சில வருடங்களில் தமிழ் தேசிய அரசியலில் ஏற்பட்ட தவறுகள், தடம்புரள்வுகள், எமது மக்களின் மனங்களில் ஆழப்பதிந்துவிட்டன. இதற்குரிய தீர்வினை முதலில் கண்டறிய வேண்டும்

குறிப்பிட்ட விடயங்களுக்காக ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தினை பலமாக கட்டி வளர்ப்பதுடன், தனி நபர்களையோ, அமைப்புக்களையோ நம்புவதை விட முழுமையாக மக்களை மையப்படுத்திய புதிய வழிமுறைகளுடன் முன்னேற வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் சிதைந்து போயுள்ளதால், உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமுள்ள தமிழ் தேசிய உணர்வாளர்கள், தமது தமிழ் தேசிய உணர்வை அடைவதற்காக பல்வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளார்கள். இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டிய அத்தியாவசியம் இந்தக் காலகட்டத்தில் எழுந்துள்ளது.

இந்தக் கடமைப் பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்திற்கு அனைவரின் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் . என்றார்.

Leave a comment