ஸ்டாலினும் தினகரனும் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் – ஓ.பன்னீர்செல்வம்

76 0

அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசியில் பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார்.

கொட்டும் மழையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் எத்தனையோ சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி அ.தி.மு.க.வை வளர்த்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். இருந்தபோது அ.தி.மு.க.வில் 16 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். அதை 1 1/2 கோடி உறுப்பினர்களாக உயர்த்தியவர் ஜெயலலிதா.

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்று இருவரும் ஆட்சி நடத்தினர். அவர்களது வழியில் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். மக்கள் நலத்திட்டங்கள் தொலை நோக்குடன் தொடங்கி தற்போது சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது.

2016 சட்டசபை தேர்தலில் எப்படியாவது அ.தி.மு.க.வை தோற்கடித்து விட வேண்டும் என்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைத்தார். அவரது எண்ணம் நிறைவேறவில்லை. மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்த பலர் தோற்றுப்போனார்கள்.

 

 

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் தற்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தினகரன் முயற்சி செய்து தோல்வியடைந்து வருகிறார். அவரது சதி வேலைகள், மக்களிடம் அவர் எப்படிப்பட்டவர் என்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க திட்டம் போட்டதில் தற்போது 18 எம்.எல்.ஏ.க் களின் கதி, அதோகதியாகப் போகிறது. தொண்டர்கள் அ.தி.மு.க.வின் பக்கம் இருக்கும்போது யாரும் எதுவும் செய்ய முடியாது.

தினகரன் கட்சியில் அனைவருக்கும் பதவி என்று வாரி வழங்கி வருகிறார். அவர் ஜாதகத்தை வைத்துக் கொண்டு ஜோதிடர்களிடம் வெற்றி பெற இயலுமா? என்று கேட்டுக் கொண்டு வருகிறார்.

குழப்பத்தை உருவாக்கி சித்து வேலை செய்து ஆட்சியை கலைத்து விட வேண்டும் என்று தினகரன் நினைக்கிறார். அது பலிக்காது.

அ.தி.மு.க. ஒரு எக்கு கோட்டை. ஸ்டாலினை தி.மு.க.வினர் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. தினகரனும், ஸ்டாலினும் சேர்ந்து உள் நோக்கத்தோடு செயல்படுகிறார்களோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஸ்டாலின் என்ன செய்தாலும் அது மக்களிடம் எடுபடாது.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment

Your email address will not be published.