இறை நம்பிக்கையுடையோர் மாற்று மத வழிபாட்டுத் தலங்களை மதிக்க வேண்டும் – ஆனந்தசங்கரி

281 0

இறை நம்பிக்கை கொண்ட அனைவரும் மாற்று மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை மதித்து, பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்த தமிழர் விடுதலை கூட்டணியின் வி.ஆனந்தசங்கரி, கோவில் சம்மந்தப்பட்ட விடயத்தில் கல்முனை மாநகர சபையில் ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வு இனங்களுக்கடையேயான நல்லுறவை பாதிப்படையச் செய்யும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சகல இன மத மக்களின் வணக்கஸ்தலங்கள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியதொன்றாகும். இறை நம்பிக்கை கொண்ட அனைவரும் மாற்று மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை மதித்து, பாதுகாக்க வேண்டும். இதைத்தான் ஒவ்வொரு மதமும் போதிக்கின்றது. இதனை உணர்ந்து கொண்டால் மாற்று மதத்தினரின் உள்ளங்ளை நோகடிக்கும் எண்ணம் எவருக்கும் ஏற்படாது.

இப்பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து உறுப்பினர்களின் கருத்தினைக் கேட்டு மிகவும் சுலபமான முறையில் இதனை அணுகி இருக்கலாம். அதனை விடுத்து தன்னிச்சையாக இதனை நீதிமன்றம் வரை எடுத்து சென்று விட்டு, அதன் பிறகு நீதி மன்றத்தின் விசாரணையில் உள்ளபடியால் அது சம்மந்தமாக எவரும் சபையில் கருத்துக் கூற முடியாது என்று கூறுவது ஒரு ஜனநாயக செயற்பாடாக நான் கருதவில்லை. ஜனநாயக முறைப்படி எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இதனை அணுகியிருக்கலாம்.

நல்லாட்சி அரசும் சகல இன, மத மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்டது. தமிழ் மக்களும் இஸ்லாமிய மக்களும் மொழியால் ஒன்று பட்டவர்கள் என்ற காரணத்தினால் தமிழர் விடுதலைக் கூட்டணி அன்று தொட்டு இன்று வரை இரண்டு சமுகங்களுக்கிடையில் ஒற்றுமையை பேணுவதற்காக பாடுபட்டு வந்துள்ளது.

அந்த வகையில்தான் பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் கல்முனை மாநகர சபையில் ஆளும் தரப்பிற்கு ஆதரவு தர முன்வந்தது. அந்த நல்லெண்ணத்தை சகல தரப்பினரும் புரிந்து கொண்டு, இந்த கோவில் சம்மந்தமான பிரச்சினைக்கு மற்றவர்களின் மனதை புண்படுத்தாமல் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment