மீகஹதென்ன பலவத்த நகரில் வைத்து தங்கமுலாம் பூசிய வெள்ளிக்கட்டிகளை, தங்ககட்டிகள் என ஏமாற்றி விற்பனை செய்ய முயற்சித்த சந்தேகநபர்கள் மூவர் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மீகஹதென்ன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை விசேட அதிரடி படைப்பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றை களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டத்தையடுத்து சந்தேகநபர்கள் மூவரும் பலவத்த நகரில் வைத்து சந்தேக பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பத்தேகம மற்றும் கிரிம பிரதேசங்களைச் சேர்ந்த 29,32 மற்றும் 33 வயதுகளையுடயை மூன்று ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீகஹதன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலவத்த நகரில் தங்கமுலாம் பூசிய வெள்ளிக்கட்டிகளை தங்க கட்டிகள் என ஏமாற்றி 30 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்ய முயற்சித்து, அதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை, தங்கமுலாம் பூசிய வெள்ளிக்கட்டிகள் 448, கத்தியொன்று, 326 கிராம் நிறையுடைய தங்க கட்டியொன்று, தொலைப்பேசிகள் 2 மற்றும் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் வாகனமொன்றுடன் கைதாகியுள்ளனர்.

