உறவில் விரிசல் ஏற்படுத்தவே றோ ​வின் பெயரை பயன்படுத்துகின்றனர்!

17 0

இந்தியா- இலங்கைக்கிடையில் பிரச்சினையைத் தோற்றுவிக்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்ய இந்தியப் புலனாய்வு அமைப்பான “றோ” உளவு அமைப்பின் பெயரைத் தொடர்புபடுத்துவதாக, சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (17) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தன்னைக் கொலை செய்ய இந்தியப் புலனாய்வு அமைப்பான றோ அமைப்பு முயல்வதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற அமைச்சரவைச் சந்திப்பின் போது தெரிவித்ததாக, “த ஹிந்து” இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளமை தொடர்பில், ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

அக்கேள்விக்குப் பதிலளித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித, “றோவின் பெயரைப் பயன்படுத்தி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினையை உண்டு பண்ண இவ்வாறான போலித் தகவல்கள் பரப்பப்படுவதாகவே அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி தெரிவித்தார். “த இந்து” இணையத்தளத்தில் குறிப்பி டப்பட்டுள்ளதைப் போன்று எதையுமே ஜனாதிபதி தெரிவிக்கவில்லை” என்றார்.

கேள்வி: ஜனாதிபதியைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் குரல் ஒளிப்பதிவுகள் அவருடையதென உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் ஏன் இன்னும் கைதுசெய்யப்படவில்லை?

பதில்: இந்தக் கொலை சதி முயற்சி என்பது ஓர் அரசியல் நாடகம். குரல் ஒளிப்பதிவுகளை வைத்து ஒருவரை கைது செய்யுங்கள் என்று சொல்வதை விட அந்த ஒளிநாடாவில் என்ன இருந்தது எனப் பார்க்க வேண்டும். ஒளிநாடாவில் உள்ள குரல் பதிவு முக்கியமில்லை. அதில் அவ்வாறானதொரு சதி திட்டம் உள்ளதா எனப் பாருங்கள் என்றார்.

அத்துடன், ஊழல் எதிர்ப்புப் பிரிவின் செயல் பணிப்பாளர் என ஊடகங்களால் கூறப்படும் நாமல் குமார, பொலிஸுக்கு தகவல்களை வழங்கும் ஒருவராவார். பொலிஸாருக்குத் தகவல் வழங்குவோரில், போதைப்பொருள் பயன்படுத்துவோர், கசிப்பு விற்பவர்கள் என பலர் உள்ளனர். எனவே, இவ்வாறானவர்கள் படையணி என்று கார்ட்போட் மட்டைகளை தூக்கிப் பிடித்ததும் ஊடகங்கள் அவர்களை பிரபலங்களாக மாற்றிவிடுகின்றன என்றார்.

கேள்வி: கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு நுழைவாயிலை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்குவது குறித்து, அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளமைத் தொடர்பிலும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

பதில்: அவ்வாறான எந்தவொரு சம்பவமும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இடம்பெறவில்லையென்றும், ஊடகங்களில் வெளிவந்துள்ள இந்தச் செய்திக்கு மறுப்புத் தெரிவித்து அமைச்சரவையால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, குறித்த நுழைவாயில் பகுதியில் அடிப்படை அபிவிருத்திகளை இந்திய அரசாங்கம் அல்லது இந்திய நிறுவனம் ஊடாக முன்னெடுப்பது குறித்த எந்தவொரு திட்டம் தொடர்பிலும் அமைச்சரவை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை என்றார்.

அத்துடன், நேபாளத்தில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டுக்கு அண்மித்ததாக, தனக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துதல், வலய பாதுகாப்பு போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடியமை தொடர்பில், அமைச்சரவையில் ஜனாதிபதி தெளிவுபடுத்தியதாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.

கேள்வி: கொழும்புத் துறைமுக அபிவிருத்தி தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் மஹிந்த சமரசிங்க சமர்ப்பித்தாரா, அதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதா?

பதில்: இல்லை அவ்வாறு எந்தவொரு யோசனையும் முன்வைக்கவில்லை. அமைச்சரவைப் பத்திரங்கள் 108 முன்வைக்கப்பட்டன. அதில், 43 பத்திரங்களுக்கே, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றார்.

கேள்வி: அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

பதில்: அரசியல் கைதிகளில் யாருக்கு பொது மன்னிப்பளிப்பது மற்றும் விடுதலை செய்வது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்து வருகின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து பிரதமருடன் கடந்த வாரம் நான் கலந்துரையாடினேன். தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள நூற்றுக் கணக்கானோருக்கும் சட்டரீதியாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்களில் எத்தனை பேரை விடுவிக்கலாம் என்றும் நாம் கலந்துரையாடினோம்.

இதில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்தோரும் உள்ளதாகவும் அவர்களை விடுதலை செய்வது சாத்தியமில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டார். அத்துடன், மிக பாரதூரமற்ற வழக்குகளும் உள்ளன. ஆகவே, அவற்றுள் அனைவரது பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளதுடன், மேலும் 102 பேரினது வழக்குகள் தொடர்பிலேயே தீர்மானிக்கப்படவுள்ளன.

ஆகவே, அவ்வாறான வழக்குகள் தொடர்பிலான பீ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது யாருக்கு தண்டனையளிப்பது என்பது குறித்தே அந்தக் கலந்துரையாடலில் ஆராய்ந்தோம் என்றார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுப்பு

2018 ஒக்டோபர் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய புலனாய்வு சேவையொன்றுடன் தொடர்புபடுத்தி கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக வெளியிட்டுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதியைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சதி முயற்சியில் இந்திய உளவுத்துறையின் எந்தவோர் ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி இதன்போது கருத்துத் தெரிவிக்கவில்லை என்பதை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெளிவுபடுத்த விரும்புகிறது.

குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதியைப் படுகொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. படுகொலை சதி முயற்சி தொடர்பில் விரிவான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்ட ஏனைய விடயங்களுள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும் உள்ளடங்குகின்றது. இதன்போது தேசிய பொருளாதாரத்தின் நன்மைக்கு இலங்கை, ஆழ் கடல் துறைமுக முனையம் ஒன்றை கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.

தற்போதுள்ள அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியாவும் இலங்கையும் மிக நெருங்கிய நல்லுறவையும் ஒத்துழைப்பையும் பேணிவருகின்றன. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு காரணமாக அமையும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு உயர்மட்ட விஜயங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்திய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியை நேற்று(17) காலை சந்தித்தபோது இதனுடன் தொடர்பான அனைத்து விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டதுடன், இருதரப்பு உறவுகளும் உறுதிப்படுத்தப்பட்டன என்பதை ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட விரும்புகின்றது.

இந்த சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் இருந்துவரும் நல்லுறவுகளுக்கும் இரு தலைவர்களுக்கும் இடையிலான சிறந்த தனிப்பட்ட தொடர்புகளுக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் சில உள்நோக்கம் கொண்ட தரப்புகளால் இத்தகைய திரிபுபடுத்தப்பட்ட விடயங்கள் பரப்பப்படுதல் மிகவும் கவலைக்குரியதாகவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Post

நாட்டில் இன்று சுனாமி ஒத்திகை, மக்கள் வீண் பயம்கொள்ள வேண்டாம்- துமிந்த

Posted by - September 5, 2018 0
சுனாமி அனர்த்தத்துக்கு முகம்கொடுப்பதற்கு பிராந்திய நாடுகளை தயார்படுத்தும் நோக்கில் உலகிலுள்ள 28 நாடுகளில் இன்று (05) நடைபெறும் சுனாமி ஒத்திகை நிகழ்வில் இலங்கையும் கலந்துகொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக…

பொலிஸ் அதிகாரிகள் 24 பேருக்கு உடனடி இடமாற்றம்

Posted by - July 14, 2017 0
தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 24 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பை விட பொருளாதாரத் தீர்வே முக்கியம் – சுசில் பிரேமஜயந்த

Posted by - October 31, 2017 0
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டிற்கு புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு முன் பொருளாதாரத் துறையில்…

மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணை நாள் அறிவிப்பு

Posted by - July 10, 2017 0
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. 27 மில்லியன்…

Leave a comment

Your email address will not be published.