எமது மக்கள் தனி நாடு கேட்கவில்லை தனியாக வீடுகளை கேட்கின்றார்களாம் -திகாம்பரம்

21023 0

பெருந்தோட்ட பகுதியில் வாழ்கின்ற தோட்ட மக்களுக்கு ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வீடுகள் தேவைப்படும் நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கு முன் 25000 வீடுகளை கட்டி முடிப்பேன். இவ் வீடுகளை கட்டியமைத்ததன் பின்பே மக்கள் மத்தியில் வாக்குகளை கேட்க வருவேன் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பண்டாரவளை பூணாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் அமைக்கப்பட்ட 157 வீடுகள் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பெருந்தோட்ட பகுதியில் லயன் அறையில் வாழ்ந்து அந்த மக்களின் துக்கங்களை அறிந்த ஒருவர் அரசியல் தலைவராக வரும் பொழுது மக்களுடைய வீட்டு பிரச்சினை மாற்றம் பெறும் என தெரிவித்து அரசியலில் காலடி எடுத்து வைக்கும் பொழுது என்மீது முட்டையால் தாக்கி எதிர்த்தனர்.

இன்று அவர்கள் ஓடி ஒழிந்து விட்டார்கள். மாறாக நான் மக்களின் துக்கத்தை அறிந்த நிலையில் அம்மக்களுக்கான வீடுகளை கட்டி வருகின்றேன். என்னை எதிர்த்தவர்கள் இப்போது என் முன் வரட்டும். நான் லய குடியிருப்பில் வாழ்ந்தவன்.

2020 ஆம் ஆண்டு மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சிக்கு வரும் அப்போதும் நான் அமைச்சராகவே இருப்பேன். நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரமதாஸ உள்ளிட்ட இன்னும் பல அமைச்சர்கள் என்னோடு இருப்பார்கள். ஆகையால் ஐக்கிய தேசிய கட்சியை நான் பாதுகாப்பேன். காரணம் எனது சமூகத்திற்காக நான் கேட்டதை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இன்னும் வழங்கி வருகின்றது. எமது மக்களை தனி வீட்டில் வாழும் அதிகாரத்தை உரிமையோடு தந்துள்ளது.

ஆகையால் ஐக்கிய தேசிய கட்சியை நான் பாதுகாப்பேன். எமது கூட்டணி சிறப்பாக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இன்று ஊவா பிரதேசத்தில் 157 வீடுகளை கட்டியமைத்து மக்கள் பாவனைக்கு கையளித்துள்ள நான். எதிர்வரும் சில காலங்களில் லெஜரவத்த தோட்டத்தில் வீடமைப்பு திறப்பு விழாவை நடத்தவுள்ளேன்.

நான் எனது மக்களை ஒரு காலமும் ஏமாற்ற மாட்டேன். எமது மக்கள் வேறு நாடு கேட்கவில்லை. அவர்கள் தனியாக வீடுகளை கேட்கின்றார்கள். ஆகையால் இந்த மலையக மக்கள் கட்டாயமாக அபிவிருத்தி அடைவார்கள். இந்த மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்றி வருகின்றேன்.

அடுத்து வரும் தேர்தலில் கூட தைரியமாக மக்கள் முன் சென்று வாக்குகளை கேட்பேன். என்னை பொருத்தமட்டில் நான் வாழ்ந்த லயன் வாழ்க்கை எனது மக்கள் வாழ்கின்ற லயத்து வாழ்க்கையை எதிர்கால சந்ததியினர் வாழ கூடாது என நினைத்து இவர்களை தனி வீட்டில் வாழ வைக்கும் இலக்கினை கொண்டு எனது சேவையினை நான் முன்னெடுத்து வருகின்றேன் என்றார்.

Leave a comment