ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதியமைச்சர் பைசல் காசிமிடம் வாக்குறுதியளித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற விசேட செயலணிக் கூட்டத்தில் கலந்துகொண்ட பைசல் காசீம் மேற்படி பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
அத்தோடு,ஏற்கனவே ஜனாதிபதியைச் சந்தித்து இந்தப் பிரச்சினையை அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்தமையையும் இது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி குழு ஒன்றை நியமித்தமையையும் பைசல் காசீம் ஜனாதிபதிக்கு ஞாபகப்படுத்தினார்.
இதன்போது ஜனாதிபதி, இது தொடர்பில் ஆராய்வதற்காக உடனடியாகக் குழுவொன்று அமைக்கப்படும் என்றும் அதன்பின் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று முன்வைக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் பைசல் காசிமிடம் வாக்குறுதியளித்தார்.

