கொரியாவில் 19 வருடங்களுக்கு முன் 18 வயது யுவதி மீது கூட்டுப்பாலியல், கொலை ; 3 இலங்கையர்கள் குறித்து தீவிர விசாரணை!

211 0

தென் கொரியாவில் 19 வருடங்களுக்கு முன்னர் 18 வயதுடைய யுவதி ஒருவரை கூட்டுப்பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டு  தொடர்பில் இலங்கையர்கள் மூவருக்கு எதிராக  குற்றப்புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 

தென் கொரியா இராஜதந்திர ரீதியாக கொடுத்த தகவலுக்கு அமைய, சட்ட மா அதிபரின் ஆலோசனையின்  பேரில்  இவ்விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இது தொடர்பில் கொரியாவுக்கு சென்று விஷேட வாக்கு மூலங்களையும்  விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளதாகவும்  பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.

சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ரவி செனவிரட்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின்  ஆலோசனைக்கு அமைய பொலிஸ் அத்தியட்சர் வெதிசிங்கவின் கீழ் “இன்டர்போல்” பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜகருணா தலைமையிலான குழுவினர்  இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பில் நேற்று சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்தியட்சர் வெதிசிங்க கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவின் தகவல்களின் பிரகாரம், 1998 ஆம் ஆண்டு கொரியாவின் ‘ தேகு’ பகுதியில் குமா அதிவேக பாதையில் வாகன விபத்தொன்றினால் 18 வயதான யுவதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள அந்நாட்டு பொலிஸார், இறந்த அந்த யுவதியின்  உள்ளாடையை விபத்து நடந்த இடத்திலிருந்து  சில மீற்றர்கள் தூரத்தில் இருந்து பின்னர் கண்டுபிடித்துள்ளனர். அந்த உள்ளாடையில் விந்து கறைகள் இருந்துள்ள நிலையில், அதனை தென் கொரிய பொலிஸார் டி.என்.ஏ. சோதனைகளுக்கு அனுப்பியுள்ளனர்.

இதன்போது விந்தணுக்கள் ஊடாக டி.என்.ஏ. மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்ட போதும், அந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.  கொரிய அதிகாரிகள்  குறித்த விந்தணுவில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ. மூலக் கூறுகளை அந் நாட்டு டி.என்.ஏ.  களஞ்சியத்தில் சேமித்து வைத்திருந்துள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு, பிறிதொரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய பணம் கொடுத்து அழைத்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில்  கொரிய வேலை வாய்ப்புக்கு சென்ற இலங்கையர் ஒருவர் தேகு நீதிமன்றினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதனையடுத்து அந் நாட்டு வழக்கப்படி அவரது டி.என்.ஏ. அந் நாட்டு அதிகரிகளால் பெறப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட டி.என்.ஏ. மூலக் கூறுகளில் ஒன்றுடன் இணங்கியுள்ளது.

இதனையடுத்து, 1998 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட யுவதியின் தந்தையின் முறைப்பாட்டுக்கு அமைவாக , குறித்த இலங்கையருக்கு எதிராக அது தொடர்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும்  தேகு நீதிமன்றினால் அவர் அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கொரிய சட்டத்தின் பிரகாரம் பாலியல் பலாத்காரம் தொடர்பில் 10 வருடங்களுக்குள் முறைப்பாடளிக்க வேண்டும். எனினும்  குறித்த யுவதி விவகாரத்தில் முறைப்பாடானது 12 வருடங்களின் பின்னர் செய்யப்பட்டதால் சந்தேக நபரான இலங்கையரை அந் நாட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது.

கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட யுவதியின் தந்தை, உறவினர்கள் அந் நாட்டு  அதிகாரிகளுக்கு தொடர்ந்து முன்வைத்த  கோரிக்கைகளுக்கு அமைவாக, அந் நாடு கடந்த 2017.08.28 அன்று அவ்விடயம் தொடர்பில் இராஜ தந்திர ரீதியாக இலங்கைக்கு அறிவித்துள்ளது. அத்துடன்  கடந்த 2018.05.30 அன்று அந் நாட்டின் தூதுக் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளதுடன் அவர்கள் சட்ட மா அதிபர், நீதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் சி.ஐ.டி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

இதனையடுத்து சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.யினர் முழு சம்பவம் தொடர்பிலும்  தென் கொரியா சென்று விசாரித்துள்ளனர். அங்குள்ள இலங்கை தூதரகத்தில் இருந்தவாறு வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ள சி.ஐ.டி.யினர் சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் பார்வையிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இலங்கையர்கள் தற்போது இலங்கையிலேயே உள்ளதாக கூறும் சி.ஐ.டி. சந்தேக நபர்கள் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக நேற்று கோட்டை நீதிவானுக்கு அறிவித்தனர்.

நீதிமன்ற கட்டமைப்பு சட்டத்தின் விதிகளுக்கு அமைய, இலங்கையர் ஒருவர் இலங்கையின் தேச எல்லைக்கு அப்பால் செய்யும் குற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இலங்கை நீதிமன்றுக்கு உள்ளதாக சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சி.ஐ.டி.யினர் மன்றுக்கு அறிவித்தனர். அதன்படியே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இந் நிலையில் சந்தேக நபர்களைக் கைதுசெய்ய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a comment