பொதுப்போக்குவரத்து சேவை பாராட்டைப்பெறும் சேவையாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி

202 0

நாட்டின் பொதுப்போக்குவரத்து சேவையை பயணிகளின் பாராட்டைப்பெறும் சேவையாக மாற்றுவது அவசியம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

பொதுப்போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்தி முறையான போக்குவரத்து சேவையாக அதனை பேணுவது தொடர்பாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தரமான பொதுப்போக்குவரத்து சேவையை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதற்காக 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “சஹசர” திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும் தரமான போக்குவரத்து சேவையை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பது பற்றியும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் பொதுப்போக்குவரத்து சேவையை பலப்படுத்தி மாற்றுப் போக்குவரத்து முறைகளுக்கு திரும்பியுள்ள பயணிகளை மீண்டும் பொதுப்போக்குவரத்து சேவையின்பால் ஈர்த்தல், அதன்மூலம் நாட்டின் வீதிப் போக்குவரத்து நெரிசல்களை குறைத்தல், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை மக்கள் நேயப் பொறிமுறையாக மாற்றும் விரிவான வேலைத்திட்டம் தொடர்பாக இதன்போது ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

போக்குவரத்துப் பிரச்சினை நாட்டின் பொருளாதாரத்திற்கு பெருமளவு தாக்கம் செலுத்துவதுடன், உரிய நேரத்திற்கு பயணங்களை மேற்கொள்ள முடியாதிருத்தல், பஸ் வண்டியினுள் அதிக நெரிசல், வீதிப் போக்குவரத்து நெரிசல்கள், நல்ல ஒழுக்கப் பண்பாட்டையுடைய சேவை கிடைக்காமை போன்ற பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற விடயங்கள், பஸ் உரிமையாளர்களின் வருமானம் குறைந்து அவர்களிடையே போட்டித்தன்மை ஏற்படுதல், பஸ் ஊழியர்களிடம் தொழில் பற்றிய மதிப்பின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இதனால் உருவாகியுள்ளன.

2008ஆம் ஆண்டு மொத்தப் பயணிகளில் 65 வீதமானவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்திவந்த நிலையில், அது தற்போது 40 வீதமாக குறைவடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து துறையிலுள்ள பிரச்சினைகள் காரணமாகவே பயணிகள் நாளுக்கு நாள் மாற்றுவழிகளை தெரிவுசெய்யும் நிலை உருவாகியுள்ளது என்பதனை அந்த புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த நிலைமையை மாற்றி வினைத்திறன் வாய்ந்ததும் முறையானதுமான பொதுப்போக்குவரத்து சேவையை நாட்டில் ஏற்படுத்துவது தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a comment