விக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து!

372 0

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிப் பேசியிருக்கின்றார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணிக்கு, அவர் தலைமையேற்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் பேரவையிலுள்ள சில கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் புத்திஜீவிகளும் தொடர்ந்து விடுத்துவரும் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலொன்றை வழங்கும் கட்டத்துக்கு, அவர் வந்திருக்கின்றார்.

முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும், தன் முன்னால் நான்கு தெரிவுகள் இருக்கின்றனவென, விக்னேஸ்வரன் கூறுகிறார். முதலாவது, ஓய்வு வாழ்க்கையைத் தொடர்வது; இரண்டாவது, கட்சியொன்றுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது; மூன்றாவது, புதிய கட்சியை ஆரம்பிப்பது; நான்காவது, கட்சி அரசியலைக் கைவிட்டு, தமிழ் மக்கள் பேரவையைப் பேரியக்கமாக மாற்றுவது.

இதில், முதலாவது தெரிவை, கூட்டமைப்பிலுள்ள சிலர் விரும்பினாலும், கூட்டமைப்புக்கு எதிரான அணிகளோ, விக்னேஸ்வரனோ விரும்பவில்லை. ஆக, அந்தத் தெரிவு ஒப்புக்குச் சொல்லப்பட்ட ஒன்று.
அதுபோல, நான்காவது தெரிவையும் ஒப்புக்குச் சொல்லப்பட்ட ஒன்றாகவே கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், விக்னேஸ்வரனின் ஐந்து வருட அரசியலில், அவர் என்றைக்குமே தன்னையொரு களச் செயற்பாட்டாளராகவோ, சமூகத்துக்குள் மக்களோடு மக்களாகச் சமாந்தரமாகப் பயணித்து, விடயங்களைக் கையாளக் கூடியவராகவோ காட்டிக் கொள்ளவில்லை.அவரின் செயற்பாட்டு அரசியல் என்பது, அவர் அணியும் ஆடைகள் மாதிரியானவை; மடிப்புக் கலையாத தன்மை கொண்டவை; வேர்வைகள் கூட ஒட்டாதவை.

அப்படிப்பட்ட ஒருவரால், அதிக உழைப்பைக் கோரும் செயற்பாட்டு அரசியலை, அதாவது, கட்சி – வாக்கு அரசியலுக்கு அப்பாலான மக்கள் அரசியலைச் செய்வதற்கான வாய்ப்புகள் துளியும் இல்லை.
ஏனெனில், பேரவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், பேரவைக்குள் அவரின் செயற்பாடுகள் எப்படிப்பட்டவை என்பதை நோக்கினாலே புரிந்து கொள்ள முடியும்.

பேரவையின் முக்கிய செயற்பாடுகளாக எழுக தமிழையும் அரசியல் தீர்வுக்கான யோசனைகள் முன்வைப்பையும் கொள்ள முடியும்.

ஆனால், ‘எழுக தமிழ்’ போன்ற மக்களை ஒருங்கிணைக்கும் போராட்டச் செயற்பாட்டுக்கான முனைப்பை வெளியிடும் கட்டத்தில், விக்னேஸ்வரன் ஒரு முகமாக மாத்திரமே இருந்தார். அவர், ஒரு செயற்பாட்டாளராக இருக்கவில்லை.

மற்றவர்கள் ஓடி ஆடிக் கட்டிய மேடையில், பிரதம இடத்தைப் பிடிப்பது மாத்திரமே அவரின் பாத்திரமாக இருந்து வந்திருக்கின்றது. கடந்த ஐந்து வருடப் பயணத்தில், விக்னேஸ்வரன் முதலமைச்சராகியதும், பேரவையின் முகமாகியதும் அப்படித்தான்.

இனி வருங்காலங்களில், இரண்டாவது,  மூன்றாவது தெரிவுகளின் இணைப்புப் பாதையிலேயே விக்னேஸ்வரன் பயணிக்க வேண்டியிருக்கும். ஏனெனில், மாகாண சபைத் தேர்தல், ஜனவரி மாதம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதற்குள், புதிய கட்சியொன்றை ஆரம்பித்து, தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்து, அதன் பின்னர் கூட்டணியொன்றை ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆரம்பித்தல் என்பது சற்றுச் சிரமமானது.

அப்படியான நிலையில், ஏற்கெனவே இருக்கும் கட்சிகளுடன், பேரவையையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, பேரவையின் வழி, தன்னைத் தலைவராக முன்னிறுத்தி, தேர்தல்களைச் சந்திக்கலாம் என்று விக்னேஸ்வரன் நினைக்கலாம்.

ஆனால், பேரவை, வாக்கு அரசியலில் ஈடுபடாது என்கிற உறுதிமொழியை வழங்கிய பின்னரே, அதன் இணைத் தலைவர் பதவியை ஏற்றதாக, விக்னேஸ்வரன் பல தடவைகள் கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், தேர்தல் கூட்டணியொன்றுக்குள் பேரவையை வெளிப்படையாகக் கொண்டு வருவதில் சிக்கலுண்டு. அதனை, இலகுவாகக் கேள்விக்குள்ளாக்கலாம். அத்தோடு, பேரவையிலுள்ள புத்திஜீவிகளும் வைத்தியர்களும், பேரவை மீது ஒட்டுமொத்தமாகத் தேர்தல் அரசியல் அடையாளம் விழுவதையும் விரும்பவில்லை.

அவர்கள், பேரவை ஒருங்கிணைக்கும் அரசியல் கூட்டொன்றுக்கு, விக்னேஸ்வரன் தலைமையேற்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அப்படியான கட்டத்தில், தவிர்க்க முடியாமல் கட்சியொன்றின் அடையாளத்தை விக்னேஸ்வரன் பெற வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

இன்னொரு கட்டத்தில், கூட்டமைப்போடு முரண்பட்டு, விக்னேஸ்வரனின் பின்னால் தற்போது நிற்கின்ற, பொ. ஐங்கரநேசன், க. அருந்தவபாலன், அனந்தி சசிதரன் போன்றவர்களுக்கு, புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க வேண்டிய தேவை உண்டு. அதுதான், தம்முடைய அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

ஏனெனில், பேரவையை முன்னிறுத்திக் கொண்டு, விக்னேஸ்வரனின் பின்னால் சென்றாலும், விக்னேஸ்வரனின் காலத்துக்குப் பின்னர், தங்களுடைய அடையாளம் எதுவாக இருக்கும் என்கிற குழப்பம் அவர்களுக்கு உண்டு.

அதன்போக்கில், புதிய கட்சியொன்றை எப்படியாவது ஆரம்பித்து, அதில் தங்களுக்குரிய பதவிகளை அடையாளங்களாகக் கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. அதன்போக்கில், புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளை, ஐங்கரநேசன் உள்ளிட்டவர்கள் மேற்கொண்டிருப்பதாகக் தெரிகின்றது.

ஆனால், மாகாண சபைத் தேர்தலுக்குள் புதிய கட்சியைப் பதிவு செய்து, சின்னத்தைப் பெறமுடியுமா என்பது சந்தேகமே? அதனை, விக்னேஸ்வரனும் வெளிப்படுத்துகிறார்.

விரைவாகத் தேர்தலொன்று வரும் நிலையில், பேரவைக்குள் இருக்கிற கட்சிகளில் ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னம்) ஆகியவற்றின் சின்னங்களில் ஒன்றில் பயணிக்க வேண்டிய கட்டத்தை ஏற்படுத்தலாம். இது, உண்மையிலேயே விக்னேஸ்வரனுக்கும், அவர் தரப்புக்கும் உவப்பான ஒன்றல்ல.

சின்னத்தின் தேவை கருதி, தமிழர் விடுதலைக் கூட்டணியை (உதய சூரியன்) உட்கொண்டுவர விக்னேஸ்வரன் முயலக்கூடும். ஆனால், வீ.ஆனந்தசங்கரியோடு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைந்து பணியாற்றுவாரா என்கிற விடயம் மேலேழுகின்றது.

சுயேட்சைக் குழுவாகச் சின்னமொன்றைப் பெற்றுக் கொண்டு, தேர்தலில் போட்டியிட்டாலும் போட்டியிடுவார்களே அன்றி, சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு, விக்னேஸ்வரனின் பின்னாலுள்ளவர்களும், சுரேஷ் பிரேமச்சந்திரனும் விரும்பமாட்டார்கள். அப்படியான கட்டத்தில், புதிய சிக்கலொன்றையும் பேரவை ஒருங்கிணைக்கப் போகும் தேர்தல் கூட்டணி சந்திக்கப்போகின்றது.

பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில், கூட்டமைப்பின் தலைமை தோல்வியடைந்து விட்டதாகத் தெரிவித்த கருத்தும் நோக்கப்பட வேண்டியது. ஏனெனில், கூட்டமைப்போடு முரண்பட, விக்னேஸ்வரன் ஆரம்பித்த காலத்திலிருந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரையிலும், தமிழரசுக் கட்சி, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களை நேரடியாக விமர்சித்து வந்தாலும், இரா.சம்பந்தன் மீது நேரடியாக விமர்சனங்களை முன்வைத்தது கிடையாது.

ஆனால், கூட்டமைப்பின் தலைமை தோல்வியடைந்து விட்டதான தொனியை, விக்னேஸ்வரன் வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பது என்பது, சம்பந்தனுக்கு எதிரான தலைமைத்துவத்தை, தான் எடுத்துக்கொள்ளத் தயார் என்று விடுத்த அறைகூவலாகும்.

சில நாட்களுக்கு முன்னர் வரையிலும் கூட, சம்பந்தனோடு பேச்சுவார்த்தையொன்றுக்குச் செல்வது தொடர்பில், விக்னேஸ்வரன் அதிக ஆர்வம் காட்டினார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி சட்டத்தரணியொருவர், அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

ஆனால், தமிழரசுக் கட்சியினரின் பலமான எதிர்ப்பை அடுத்து, அந்தச் சந்திப்பைச் சம்பந்தன் தவிர்த்தார். அத்தோடு, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தனிப்பட்ட ரீதியில், “விக்னேஸ்வரனைக் கூட்டமைப்புக்குள் இனி வைத்துக் கொள்ளப் போவதில்லை” என்றும் சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.

இதுவும் கூட, விக்னேஸ்வரன் – சம்பந்தன் சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்தவர்களை, பின்வாங்க வைத்திருக்கின்றது.

விக்னேஸ்வரன் புதிய அணியொன்றுக்குத் தலைமை ஏற்பதை, சம்பந்தன் துளியும் விரும்பவில்லை. எப்படியாவது, விக்னேஸ்வரனைத் தேர்தல் அரசியலுக்கு அப்பால், கௌரவமான ஓய்வுநிலையில் வைத்துவிட வேண்டும் என்றே அவர் விரும்பினார்.

அது, தனக்கும் கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்றும் நினைத்தார். ஆனால், அந்த முயற்சிகள் எல்லாமும் பொய்த்துப்போன புள்ளியில், விக்னேஸ்வரனை எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டம் ஏற்பட்டிருக்கின்றது.

அதன்போக்கில்தான், விக்னேஸ்வரனுக்கு உரிய நேரத்தில் பதில் வழங்கப்படும் என்ற காட்டமான செய்தியை, ஊடகங்களின் வழி சம்பந்தன் வெளியிட்டிருக்கின்றார்.

கூட்டமைப்பைத் தோல்வியடைந்த தலைமையாக விளிக்கும் விக்னேஸ்வரன், தேர்தல் வழி, இன்னோர் அணிக்குத் தலைமையாக நினைக்கின்றார். ஏனெனில், அதுதான், இலகுவானது; அதிக உழைப்பைக் கோராதது.

தேர்தல் அரசியலுக்கு அப்பால் நின்று, மக்கள் பேரியக்கங்களைத் தோற்றுவிக்கும் ஆளுமையை, 2009க்குப் பின்னரான கடந்த பத்து வருடத்தில், கூட்டமைப்போ, கூட்டமைப்புக்கு எதிரான அணியோ, எதுவாக இருந்தாலும் வெளிப்படுத்தவில்லை.

அப்படியான கட்டத்தில், தேர்தல் இழுபறி – குத்துவெட்டு அரசியலைத்தான் தொடர்ந்தும் பேச வேண்டியிருக்கும்.

புருஜோத்தமன் தங்கமயில்

Leave a comment