கிளிபொதுச்சந்தை மீளமைக்கும் பணிகள் ஆரம்பம்(காணொளி)

464 0

karaichchi-kilinochchi

கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கான உதவிகளை, கரைச்சி பிரதேச சபை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் திகதி இரவு ஏற்பட்ட தீ விபத்தினால், அனைத்து உடைமைகளையும் இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ள அவர்கள், தமது இழப்பினை எவ்வாறு ஈடுசெய்து வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்வது என தெரியாமல் தவித்து நிற்கின்றனர்.
இந்நிலையில், அரசியல் தரப்புக்கள் ஆறுதல் வார்த்தைகளையும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக தீர்கமான பல முடிவுகளை எடுப்பதாக வாக்குறுதிகளையும் வழங்கி உள்ளன.
இருப்பினும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை கரைச்சி பிரதேச சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு உந்து சக்தியாக சந்தை வணிகர்கள் மற்றும் கிளிநொச்சி வணிகர்கள் அவர்களுக்கான உணவு வகைகளை வழங்கி வருகின்றனர்.
இன்றைய தினமும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைச் செயலாளர் கம்சனாதன் முயற்சியில், கரைச்சி பிரதேச சபையின் நிதி உதவியிலும், கிளிநொச்சி வர்த்தகர்களது ஆதரவுடனும் இருபத்து இரண்டு தற்காலிக கடைத்தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இக் கடைகள் பழக்கடை வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டு நாளையதினம் மீளவும் பழக்கடைத்தொகுதி இயங்கவுள்ளது.
கிளிநொச்சியில் ஏற்பட்ட தீவிபத்தின்போது இராணுவத்தினர், பொலிஸார், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், வணிகர்கள், மக்கள் எனப் பலரும் குறித்த இடத்திற்கு குறுகிய நேரத்திற்குள் வருகை தந்து உதவிகளைச் செய்ததாகவும், அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் பாதிக்கப்பட்ட சந்தை வியாபாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.