ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அடுத்த கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில்பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இந்தக் கூட்டத் தொடரிலேயே முன்னெடுக்கப்படுவதாக தெரிகின்றது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது பிரிட்டன் இந்த பிரேரணையை 2019ஆம் ஆண்டில் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதற்கான முயற்சிகள் இந்தக் கூட்டத் தொடரிலேயே இடம்பெறுகின்றன.
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணையின் செயற்பாட்டுக்காலம் முடிவடைகின்றது. இதன்பின்னர் இலங்கையானது பொறுப்புக்கூறல் முயற்சியை முன்னெடுக்கவேண்டுமாயின் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய பிரேரணை ஒன்று முன்னெடுக்கப்படவேண்டும்.
அவ்வாறு ஒரு பிரேரணையை 2019ஆம்ஆண்டு கொண்டுவருவதற்கு தீவிரமாக தற்போது முயற்சிக்கப்படுகின்றது. இம்முறை 39ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மற்றுமொரு பிரேரணையை ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் கொண்டுவரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த உள்ளனர்.
எனினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோ, பிரிட்டனோ இதுவரை இதுதொடர்பில் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த 2012,2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை அமெரிக்காவே முன்னின்று கொண்டுவந்தது. அதாவது அமெரிக்கத் தலைமையிலான நாடுகளே இந்தப் பிரேரணைகளை கொண்டுவந்தன.
ஆனால் தற்போது ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் 2019ஆம் ஆண்டு பிரேரணை கொண்டுவருவதற்கு அமெரிக்கா முயற்சிக்குமா என்பது சந்தேக்கத்துக்கு இடமாக உள்ளது. இந்த சூழலிலேயே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது பிரிட்டன் இவ்வாறு புதிய பிரேரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யவேண்டுமென தமிழ் தரப்பு பிரதிநிதிகள் வலியுறுத்தவுள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. அதன்படி 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம்வரை அந்த பிரேரணையை அமுல்படுத்த இலங்கைக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் அக்காலப்பகுதியில் பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்பட்டிராததால் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்கும் நோக்கில் 2017ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையில் 37 ஆவது கூட்டத் தொடரில் மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 2015ஆம்ஆண்டு பிரேரணையின் நீடிப்பாகவே இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
அதன்படி 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் இந்தப் பிரேரணையின் செயற்பாட்டுக்காலம் நிறைவடைகின்றது. அதன் பொருட்டே இம்முறை ஜெனிவாவில் அடுத்த பிரேரணைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இம்முறை ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளினால் பல்வேறு உபகுழுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த உபகுழுக்கூட்டங்கள் ஜெனிவா வளாகத்தில் நடத்தப்படவுள்ளன.
இந்தக்கூட்டங்களில் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். இந்தக் கூட்டங்களின்போதே புதிய பிரேரணைக்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம்திகதி முதல் 28 ஆம்திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான அறிக்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்கப்படும்.
கடந்த வௌ்ளிக்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு இந்த அறிக்கையானது தன்னிச்சையாக தடுத்து வைத்தல் குறித்து ஆராயும் ஐக்கியநாடுகளின் செயற்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இன்னும் சில தினங்களில் உண்மை நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப்பின் இலங்கை குறித்த அறிக்கையும் 39/53.1 என்ற தலைப்பில் மனித உரிமை பேரவைக்கு சில தினங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்த விசேட நிபுணரின் அறிக்கை தொடர்பான விவாதம் ஜெனிவாவில் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை இலங்கை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பலவந்தமாக காணாமலாக்கப்படுவது குறித்து ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழு காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை கண்டறிவதற்காக காணாமல் போனோரின் உறவுகள் நீண்டகாலம் காத்திருக்கின்றனர் என்பதனை இலங்கை அரசாங்கத்துக்கு நினைவுப்படுத்த விரும்புகின்றோம். இந்த விடயத்தில் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைய அரசாங்கம் செயற்படவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

