
வெள்ளவத்தையில் ஒரே இரவில் இரண்டு வீடுகளிலும் அலுவலகமொன்றிலும் இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
கடந்த 26 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கும் 27 ஆம் திகதி காலை 7.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவங்கள் குறித்து வெள்ளவத்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஒரே இரவில் இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவங்களினால் பிரதேசவாசிகள் மத்தியில் பெரும் அச்சநிலைமை உருவாகியிருக்கின்றது.
வெள்ளவத்தை மாயா மாவத்தை பகுதியில் காணப்படும் தனியார் காரியாலயமொன்றிலிருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. கடந்த 26 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு குறித்த காரியாலயத்தின் உரிமையாளர் காரியாலயத்தை விட்டு வீடு திரும்பியுள்ள நிலையில் 27 ஆம் திகதி காலை பணிக்கும் திரும்பிய காரியாலய உதவியாளர் ஒருவரினால் காரியாலயத்தில் காணப்படும் அனைத்து கோப்புகளும் இழுத்துப்போடப்பட்டு காணப்படுவதாக உரிமையாளருக்கு தொலைப்பேசியில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இத் தொலைப்பேசி அழைப்பையடுத்து காரியாலயத்துக்கு விரைந்து வந்த உரிமையாளரினால் காரியாலயத்தில் முதலாவது தளத்தில் காணப்படும் அனைத்து கோப்புகளும் இழுக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உரிமையாளருக்கு எழுந்த சந்தேகத்தில் இரண்டாவது தளத்திலுள்ள உரிமையாளரின் அறையின் அலுமாரியை சோதனையிட்ட போது அலுமாரியில் காணப்பட்ட பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 6 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் சூறையாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து, வெள்ளவத்தை பொலிஸில் கடந்த 27 ஆம் திகதி காலை முறைப்பாடொன்றை உரிமையாளர் பதிவுசெய்துள்ளார்.
இம்முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், காரியாலயத்தில் காணப்பட்ட சி.சீ.டி.வி. கமராக்களின் பதிவுகளும் திருடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் காரியாலயத்தின் பணியாளர்கள் 10 பேரிடம் வாக்குமூலம் பதியப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.
இதேபோல், வெள்ளவத்தை வொஸ்வெல் பிளேஸில் அமைந்துள்ள தொடர்மாடி வீட்டுத் தொகுதியொன்றில் உள்ள வீடொன்றிலிருந்தும் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிகொண்ட தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
கடந்த 27 ஆம் திகதி அதிகாலை 3.30 மணிதொடக்கம் காலை 5 மணிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் வீட்டின் உள்ளறையில் பயணப் பொதிகளில் வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிகொண்ட திருமண நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
தமது மகளின் திருமண நிகழ்வுக்காக வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இவர்கள் இந்த வீட்டினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர். 27 ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் குறித்த வீட்டுக்குள் வந்த இவர்கள் பயணப்பைகளை உள்ளறையில் வைத்து விட்டு மகளும் தாயும் அதே அறையிலும் தந்தை வீட்டின் முன்னறையிலும் நித்திரைக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் அன்று காலை 8 மணியளவில் நித்திரை விட்டெழுப்பி தமது உடைமைகள் காணப்பட்ட பயணப்பொதிகளின் பூட்டு உடைக்கப்பட்டு ஆடைகள் வெளியே வீசப்பட்டு காணப்பட்டமையை அவதானித்துள்ளனர்.
இதைப் பார்த்து கலவரமடைந்த குடும்பத்தார் நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியினை சோதனையிட்ட போது அதில் காணப்பட்ட தங்க நகைகள் அனைத்தும் கொள்ளையிடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவம் தொடர்பில் 27 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் வெள்ளவத்தை நெல்சன் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள இன்னுமொரு தொடர்மாடி வீட்டிலும் இதே இரவு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின் போது குறித்த வீட்டிலிருந்து 2 லட்சத்து 57 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் சூறையாடப்பட்டுள்ளன.
வீட்டின் உரிமையாளர் தனியார் நிறுவனமொன்றில் முகாமையாளராக பணியாற்றிவரும் நிலையில் மாலை வீடு திரும்பியஇவர் இரவு உணவின் பின் 11 மணி வரையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்து விட்டு உள்ளறையில் நித்திரைக்கு சென்றுள்ளார். இவருடன் மனைவியும் குழந்தையும் உறங்கியுள்ளனர்.
இதன்போது 27 ஆம் திகதி அதிகாலை வீட்டின் சமையலறையின் ஜன்னல்களை திறந்து உள்ளே வந்த கொள்ளையர்களினால் இரண்டாவது அறையில் காணப்பட்ட அலுமாரியை உடைத்து 2 இலட்சத்து 57 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
அதிகாலை வேளையில் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்த வீட்டின் உரிமையாளரினால் சமையலறை ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டு வீட்டின் அறைகள் பரிசோதிக்கப்பட்ட வேளையிலேயே இவ்வாறு திருடுப் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலும் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், ஒரே இரவில் வெள்ளவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இம்மூன்று திருட்டுச் சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

