அ.தி.மு.க.வில் சேர வேண்டிய அவசியம் இல்லை: டி.டி.வி.தினகரன் பேட்டி

259 0

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எனவே அ.தி.மு.க.வில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் நாளை (அதாவது இன்று) நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன். மத்திய அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது. இதே கருத்தை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கூறி உள்ளது.

தமிழகத்தில் தாமிர உற்பத்தி ஆலை வேண்டாம் என்று மாநில அரசு கொள்கை முடிவு எடுத்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியும். ஸ்டெர்லைட் ஆலையை கொல்லைப்புறமாக திறக்க முயற்சி நடக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சாமி தரிசனம் செய்ய வந்தபோது எடுத்த படம்.

மோசமான ஆட்சியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மக்கள் விரும்பாத, லஞ்சம், ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கும். பின்னர் சட்டமன்றத்தில் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கவிழும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரித்து உள்ளது. வருகிற 15-ந் தேதிக்குள் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள் விலகி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேர்ந்து வருகிறார்கள். எனவே அ.தி.மு.க.வில் நாங்கள் சேர வேண்டிய அவசியம் இல்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை தவிர மற்றவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேரலாம்.  இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

Leave a comment