இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்காவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை !

280 0

ஐ. நா மனித உரிமை ஆனைக்குழுவின் இலங்கைக்கு எதிரான அறிக்கையில் இறுதிக்கட்ட உள்நாட்டு யுத்தத்தில் போர் குற்றங்கள் இடம் பெற்றிருப்பதாக குறிப்பிடப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது. 1281 பக்கங்களை கொண்ட குறித்த அறிக்கையில் 36 பக்கங்களில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் என்ற சொற்பதம் பாவிக்கப்பட்டுள்ளதுடன், 39 குற்றச்சாட்டுக்களும் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த பூகோள இலங்கை ஒன்றியத்தின் செயலாளர் அட்மிரல் சரத் வீரசேகர

இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்காவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆராய ஜனாதிபதி சுயாதீனமான ஒரு குழுவினை நியமிக்க வேண்டும் . இக் குழு எவ்வித சர்வதேச தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக செயற்படும் வழிமுறைகளை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

ராஜகிரியவில் உள்ள பூகோள இலங்கை ஒன்றியத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரசாங்கம் நாட்டு மக்களின் விருப்பத்திற்கு நாட்டை நிர்வகிக்காமல் சர்வதேசத்தின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் செயற்படும் நிலை தற்போது தோற்றம் பெற்றுள்ளது. இராணுவத்தினருக்கு எதிராக தரூஸ்மூன் அறிக்கையினை கொண்டு அமெரிக்கா புலம் பெயர் விடுதலை புலிகள் அமைப்பின் விருப்பங்களை நிறைவேற்றும் முகமாக அறிக்கையினை சமர்ப்பித்தது. இதற்கு தேசிய அரசாங்கம் இணை அனுசரனை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் பொழுது மனித உரிமை மீறள்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் இடம் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ள பரணகம அறிக்கை தொடர்பில் அரசாங்கம் எவ்வித கவனமும் செலுத்தாமல், தரூஸ்மூன் அறிக்கையினை முன்னிலைப்படுத்தி கடந்த அரசாங்கத்தை பழிவாங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்விடயத்தில் அரசாங்கம் நாட்டுப்பற்றுடன் செயற்பட வேண்டும்.

முன்னாள் மனித உரிமை ஆனையாளர் செய்ட் ஹல் ஹூசைன் தயாரித்த அறிக்கையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும், போர் குற்றச்சாட்டுக்களும் இடம் பெறவில்லை என்று ஜனாதிபதி குறிப்பிடும் நிலைப்பாடு தொடர்பில் கருத்துக்களை குறிப்பிட முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. யுத்த குற்றங்கள் ஏதும் இடம் பெறவில்லை என்று குறிப்பிடுபவர்கள் ஏன் எமது நாட்டின் இராணுவத்தினரை சரவதேச விசாரனைக்கு உட்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள் என்ற விடயத்தை ஜனாதிபதி புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டே அமெரிக்கா மனித உரிமை பேரவையில் இருந்து விலகியது இவ்விடயத்தினை கொண்டு அமெரிக்கா சமர்ப்பித்த அறிக்கையினை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்து இலங்கை விலகிக் கொள்ளலாம் ஆனால் அரசாங்கம் ஒரு போதும் இவ்விடயத்தினை செயற்படுத்தாது. ஆகவே ஜனாதிபதி பிற விடயங்களுக்கு ஆனைக்குழுக்களை அமைப்பதை போன்று இராணுவத்தினருக்கு எதிராக சாட்டியுள்ள யுத்த குற்றங்கள் தொடர்பில் ஆராய சுயாதீன ஆனைக்குழுவை நாட்டுக்காக நியமிக்க வேண்டும்” என்றார்.

Leave a comment