ஆசிய தேர்தல் பங்குதாரர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு!

248 0

ஜனநாயக தேர்தலை பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நான்காவது முறையாக இடம்பெறும் இந்த மாநாட்டில் உங்களை சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு பலமான ஜனநாயக அடிப்படையைக்கொண்ட நாடாகும் என குறிப்பிடுவதையிட்டு நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். தேர்தல்களின் வெளிப்படைத் தன்மை தொடர்பில் நாள் கணக்கில் பேசமுடியும்.

நூற்றுக்கணக்கான நூல்களை எழுத முடியும். ஆசிய நாடுகள் என்ற வகையில் தேர்தல்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயகத்திற்காக நாம் ஏன் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். இத்தகையதொரு மாநாடு நான்காவது முறையாக ஏன் நடத்தப்பட வேண்டும்.

அநேகமான நாடுகளில் ஜனநாயகம் இல்லை. வெளிப்படைத் தன்மை பேணப்படுவதில்லை.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்கள் நடைபெறுவதுமில்லை.  இவையணைத்தும் முழுமை பெற்றிருக்குமானால் அனைத்து ஆசிய நாடுகளிலும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டிருக்குமானால், தேர்தல்களில் வெளிப்படைத் தன்மை பேணப்பட்டிருக்குமானால் நான் நினைக்கிறேன்.

இத்தகையதோர் மாநாடு அவசியமில்லை என்று அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்த விடயத்தில் ஆர்வம் காட்டுகின்ற நிறுவனங்கள் ஒன்று சேர்ந்திருப்பது முழு மனித சமூகத்தினதும் ஜனநாயக தேர்தல் உரிமையை பலப்படுத்துவதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் நடத்தப்படுகின்ற தேர்தல்கள் சுதந்திரமாகவும், நீதியாகவும் வெளிப்படைத் தன்மையாகவும் நடைபெற வேண்டும் என்பதால் அவை பலப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவாகும்.

எமது நாட்டுக்கு 1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை கிடைக்கப்பெற்றது.

1931ஆம் ஆண்டு எமது நாட்டுக்கு சர்வஜன வாக்குரிமை கிடைக்கபெறுகின்றபோது உலகில் சில மேற்கு நாடுகளிலும் கூட சர்வஜன வாக்குரிமை இருக்கவில்லை. எனவே எமது நாட்டில் குறிப்பாக ஜனநாயகம் மற்றும் தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை சில சந்தர்ப்பங்களில் சவாலுக்கு உட்பட்ட போதும் நாம் அதிஷ்டத்திற்குரிய நாடு என நான் நம்புகின்றேன்.

2015 ஜனவரி மாதம் இடம்பெற்ற நான் வெற்றிபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ் எமது நாட்டில் தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

இதற்கு முன்னர் எமக்கு தேர்தல் திணைகளமொன்றும் அங்கு கடமையாற்றும் தேர்தல் ஆணையாளருமே இருந்தனர். அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தம் இந்த நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்தியது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு ஒன்று பலமான அதிகாரங்களுடன் அமைக்கப்பட்டு இந்த நாட்டின் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு பலமானதொரு அடித்தளம் இடப்பட்டுள்ளது.

நான் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் இது போன்ற 10 ஆணைக்குழுக்களை நாம் அமைத்துள்ளோம். தேர்தல் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, கணக்காய்வு தொடர்பான ஆணைக்குழு,  அரசாங்க சேவை ஆணைக்குழு, பொலிஸ் சேவை ஆணைக்குழு, நீதித்துறை தொடர்பான ஆணைக்குழு போன்றவற்றை குறிப்பிட முடியும். இந்த சுயாதீன ஆணைக்குழுவின் மூலம் நாட்டின் நீதித்துறையில் பக்கசார்பின்மையும் சுயாதீனத் தன்மையும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

நான் செய்திப் பத்திரிகையொன்றின் முன் பக்கத்தின் ஆசிய நாடுகளின் புதிய அறிக்கையின் படி நீதித்துறையில் பக்கசார்பின்மை தொடர்பில் தற்போது எமது நாடு உயர்ந்த நிலையில் உள்ளது என்ற செய்தியை வாசித்தேன். நான் இது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இங்கிருக்கின்ற நீங்கள் அரசியல்வாதிகள் அல்ல என நம்புகிறேன்.

இங்கு ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே உள்ளார். எனது அரசியல் வாழ்க்கைக்கு 51 வருடங்கள் ஆகின்றன. தேர்தல் பற்றி ஏராளமான அனுபவம் எனக்கு உள்ளது.

எனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அனுபவங்களின் படி பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக  27 வருடங்களும் தற்போது ஜனாதிபதியாக 3 வருடங்களையும் 08 மாதங்களையும் நான் கழித்துள்ளேன். 06 பாராளுமன்ற தேர்தல்களுக்கு முகங்கொடுத்து நான் வெற்றிபெற்றிருக்கிறேன்.

நான் இந்த நாட்டின் ஆறாவது ஜனாதிபதியாவேன். இதற்காக நான் இந்த நாட்டின் அன்புக்குரிய மக்களுக்கு நன்றி கடமைப்பட்டுள்ளேன். தேர்தல் ஆணையாளர் உட்பட அன்று தேர்தல் நடவடிக்கைகளை நீதியான முறையில் அனைவருக்கும் ஜனநாயகத்தை வெற்றிபெற செய்தமைக்காக எனக்கு கிடைத்த மக்கள் ஆணையை  பலப்பத்தியதற்காக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

எமது நாட்டுக்கு 1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அது எல்லையற்ற அதிகாரங்களை கொண்ட ஜனாதிபதி பதவியாகும்.

1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் மன்னராட்சி முறைமைக்குரிய அதிகாரங்களைக்கொண்ட நிறைவேற்று ஜனாதிபதி பதவியாக மாற்றம் பெற்றது.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்கள் உலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படவில்லை.

தேர்தல் ஆணையாளரை நியமிப்பது ஜனாதிபதி. சட்டமா அதிபரை நியமிப்பது ஜனாதிபதி, பிரதம நீதியரசரை நியமிப்பதும் ஜனாதிபதி, உச்சமன்ற நீதிபதிகளை நியமிப்பதும் ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபரை நியமிப்பதும் ஜனாதிபதி, சுயாதீன ஆணைக்குழுக்கள் என்று பெயரளவில் இருந்த ஆணைக்குழுவை நியமிப்பதும் ஜனாதிபதி இவை அனைத்தும் ஜனாதிபதிக்கு தனிப்பட்ட வகையில் இருந்த அதிகாரங்களாகும். அமைச்சுக்களுக்கான செயலாளரை நியமிப்பதும் ஜனாதிபதி நான் இந்த அனைத்தையும் நீக்கினேன்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் எல்லையற்ற நிறைவேற்று அதிகாரங்களை நீக்கி இப்பதவியின் அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு வழங்கினேன்.  அவற்றை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு வழங்கினேன்.

இந்த நாட்டில் 1982ஆம் ஆண்டு முதல் 06 ஜனாதிபதி தேரத்தல்கள் நடைபெற்றன. இந்த 06 தேர்தல்களிலும் வேட்பாளர் என்ற வகையில் என்னைப்போன்று பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த எந்தவொரு வேட்பாளரும் இல்லை.

நான் தேர்தல் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தேர்தல் மேடைகள் தாக்கப்பட்டன. நானும் தாக்குதலுக்குள்ளானேன். என்னுடன் இருந்தவர்களும் காயப்பட்டனர்.

இலங்கையில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் உரையாற்றுகின்ற சந்தர்ப்பத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். எனது தேர்தல் பிரச்சார மேடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. அரச ஊடகங்கள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் அனைத்தும் சட்ட திட்டங்களை மீறி அதிகாரத்தில் இருந்த அபேட்சகருக்காக பண்பாடற்ற முறையில் செயற்பட்டன.

அரச நிதி திறைசேரியிலிருந்து எடுக்கப்பட்டு தேர்தல் வெற்றிக்காக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 2015 ஜனவரி மாதம் 08ஆம் திகதி நாட்டு மக்கள் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு நாட்டில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

இந்த மூன்றரை வருட காலப் பகுதியில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றோம். மக்களின் சுதந்திரம், மனித உரிமைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம். ஊழலற்ற, பக்கசார்பற்ற நீதியும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட ஆணையாளருக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளோம்.

கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெற்றன. கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற இத்தேர்தலில் ஏற்கெனவே இருந்த விருப்பு வாக்குமுறையை நீக்கி தொகுதிவாரி முறைமையை அறிமுகப்படுத்தினோம்.

இதன் மூலம் மிகவும் அமைதியான, ஜனநாயக ரீதியான, சுதந்திரமான தேர்தல் ஒன்று இடம்பெற்றது. இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆணையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

2015ஆம் ஆண்டு தேர்தலின்போது மிக மோசமாக தேர்தல் சட்டங்களை மீறி நாட்டின் தேர்தலை எதிர்த் தரப்பினர் நடந்துகொண்ட போது தேர்தல் தினத்தன்று வாக்குப்பெட்டியொன்றில் கை வைத்தால் அந்த நபரின் தலை சிதறிச்செல்லும் வகையில் துப்பாக்கி சூடு நடத்துமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

அந்த அளவுக்கு தேர்தல் அதிகாரிகள் பக்கசார்பின்றி நீதியாக தமது பொறுப்புகளை நிறைவேற்றினர். நம் நாடு என்ற வகையில் தேர்தல்களின் வெளிப்படைத் தன்மையையும் பக்கசார்பற்ற தன்மையையும் உறுதிப்படுத்தி சிறந்ததோர் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறோம்.

எமது நாட்டுக்கு வருகை தந்திருக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளான உங்கள் அனைவரையும் நான் மிகுந்த கெளரவத்துடன் வரவேற்கிறேன். நீங்கள் இந்த நாட்டுக்கு நேற்று அல்லது இன்று காலை வருகின்றபோது விமான நிலையத்திலிருந்து கொழும்பு நகரம் வரையில் மட்டுமே பார்வையிடக் கிடைத்திருக்கும்.

அந்த சில நிமிடங்களில் இந்த நாட்டில் நீங்கள் கண்ட அழகையும் எழிலையும் நாட்டின் உள்ளே சென்று அதனைப் பார்க்கிலும் பல மடங்கு காணமுடியும். ஆயிரக் கணக்கான வருட வரலாற்றைக்கொண்ட 5000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப, கைத்தொழில் மரபுரிமைகளை கொண்ட நாடு என்ற வகையில் இந் நாட்டுக்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

குறித்த மாநாட்டின் நோக்கங்களை அடைந்துக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. குறித்த மாநாட்டில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு நாம் உடன்படுகிறோம்.

மக்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுவதும், மனித உரிமைகள், ஊடகச் சுதந்திரம் பலப்படுத்துப்படுவதுமே எமது தேவையாகும். இவற்றை நாம் செய்துள்ளோம்.

அனைத்து தேர்தல்களும் அமைதியாகவும் நீதியாகவும் நடைபெற வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்.

இதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் பலப்படுத்தப்படவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட பணிக்குழாமினர் இதற்கு அனுசரணை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஊடகத் துறையினருக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்.

Leave a comment