தண்ணீரை சேமிக்க தமிழகம் முயற்சி செய்யவில்லை !

5797 0

தண்ணீரை சேமிக்க தமிழகம் முயற்சி செய்யவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் புகார் கூறி உள்ளார். 

கடந்த 3 மாதங்களில் தமிழகத்துக்கு 87.3 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

அதாவது ஜூன் மாதத்தில் 9.2 டி.எம்.சி. நீரும், ஜூலை மாதத்தில் 31.9 டி.எம்.சி. நீரும், ஆகஸ்டு மாதத்தில் 46.2 டி.எம்.சி. நீரும் திறக்கப்பட்டு இருக்க வேண்டும். அதாவது ஒரு ஆண்டுக்கு 177.3 டி.எம்.சி. நீர் திறக்கப்பட வேண்டும்.

ஆனால் வெள்ளம் காரணமாக கபிணி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரி நீரை அப்படியே கர்நாடக அரசு திறந்துவிட்டு உள்ளது.

குறைந்தபட்சமாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதமும், அதிகபட்சமாக 2 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீரை திறந்துவிட்டது. கடந்த 3 மாதங்களில் மட்டும் மொத்தம் 87.3 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு மொத்தம் 310.6 டி.எம்.சி. நீரை திறந்துவிட்டு உள்ளது. ஒரு ஆண்டுக்கு தரவேண்டிய காவிரி நீரை 3 மாதங்களுக்குள் திறந்துவிட்டு உள்ளது. அதுவும் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட 177.3 டி.எம்.சி. நீரை காட்டிலும் கூடுதலாக 133.3 டி.எம்.சி. நீரை திறந்து விட்டு உள்ளது.

இந்த நீரில் 250 டி.எம்.சி.க்கும் மேலான நீர் வீணாக சென்று கடலில் கலந்து உள்ளது. இந்த நீரை தமிழகம் சேமிக்கவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் புகார் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரும் காலத்தில் காவிரியில் கூடுதர் நீர் கிடைக்கும் என்பது நடப்பு ஆண்டு பெய்த மழை மூலம் அனுபவமாக கிடைத்து உள்ளது. எனவே மின்சாரம் தயாரிப்பு, பெங்களூருவுக்கு குடிநீர் தருவது ஆகிய காரணங்களுக்காக மேகதாதுவில் அணை கட்ட வேண்டியது அவசியம் ஆகிறது. இந்த அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். அந்த அணை நீரை தமிழகமும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.மேகதாதுவில் அணை கட்டினால் 67 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும்.

இந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்கிய நீரை அந்த அரசு சேமிக்கவில்லை. வீணாக கடலில் சென்று கலந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment