கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 110வது பிறந்த தினம்!

220 0

கிரிக்கெட் கடவுள், கிரிக்கெட் ஜாம்பவான் என புகழப்படும் டான் பிராட்மேனின் 110வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது அதை சிறப்பிக்கும் வகையில் டூடுல் வெளியிட்டுள்ளது கூகுல்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் டான் பிராட்மேன், பலரும் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத பல்வேறு சாதனைகளை இன்று வரை தன்னிடம் வைத்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான். அவர் விளையாடுவதைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து வித்தியாசமானது.

அதற்கு உதாரணம் 1930-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு விளையாடச் சென்றிருந்தது ஆஸ்திரேலிய அணி. அந்தத் தொடரில் முதல் டெஸ்டில் 131, இரண்டாவது டெஸ்டில் 254 ரன்கள் என குவித்து அசத்திய டான் பிராட்மேன். மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தை கதற விட்டார்.

ஹேடிங்க்லியில் நடந்த அந்தப் போட்டியில் காலை உணவு இடைவேளைக்கு முன்னர் சதம், தேநீர் இடைவேளைக்கு முன்னர் இரட்டைசதம், அன்றைய நாள் முடியும்போது 309 ரன்களுடன் நாட் அவுட் என உச்சத்தைக் காண்பித்தார். ஒரே நாளில் 300 ரன்கள் இன்னும் யாராலும் தாண்ட முடியாத சாதனையாகவே உள்ளது.

அவர் விளையாடிய 20 ஆண்டுகளில் வெறும் 50 டெஸ்ட் போட்டிகளே விளையாடப்பட்டன. அவற்றுள் இங்கிலாந்து அணியுடன் மட்டும் 37 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 6,996 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி பிரமிக்கவைக்கும் வகையில் 99.96 ஆக உள்ளது.

அவர், 29 சதங்களும், 13 அரைசதங்களும் அடித்துள்ளார். 50-களை 100-ஆக மாற்றக்கூடிய வித்தையில் பிராட்மேனின் சராசரி 69.05. ‘கிரிக்கெட் கடவுள்’ என்று புகழப்படும் டான் பிராட்மேன் 961 புள்ளிகள் பெற்று அதிகப் புள்ளிகள் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது இந்த சாதனையை இதுவரை யாரும் நெருங்கியது கிடையாது.

இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 110-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தன்னிகரில்லா அந்த சாதனையாளனை கௌரவிக்கும் விதமாக பிராட்மேன் கிரிக்கெட் பந்தை விளாசுவது போல் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது கூகுல்.

Leave a comment