ரோஸி சேனாநாயக்கவிற்கு எதிராக பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!

234 0

கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்க ஹிட்லர், நல்லாட்சி அரசாங்கத்தை இல்லாதொழிக்க வேண்டும், கொழும்பை சுத்தப்படுத்தியவர் கோத்தாபய ராஜபக்ஷ என பதாதைகளை ஏந்திவாறும், கோஷங்களை எழுப்பியவாறு பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கொழும்பு மாநகரசபையின் இம்மாதத்திற்கான கூட்டம் மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்க தலைமையில் இன்றைய தினம் கொழும்பு மாநாகரசபையின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது சபையின் எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் வாத, பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும், பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

சபையின் நடவடிக்கைகள் ஆரம்பித்ததிலிருந்து பொதுஜன பெரமுன உறுப்பினர்களான ஆர்.பி.பி.என்.சம்பத் மற்றும் குணதிஸ்ஸ ஆகியோர் எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சர்ச்சை எழுப்பியவாறு தொடர்ந்து கூச்சலிட்டனர்.

அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி, ரோஸி சேனாநாயக்கவினால் சம்பத் மற்றும் குணதிஸ்ஸ இருவரும் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடன் பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஏனைய உறுப்பினர்களும் வெளியேறினர்.

மாநகரசபை கேட்போர்கூடத்திலிருந்து வெளியேறிய பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மாநகரசபை வாயிலை மறித்தவாறு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கொழும்பு மாநகரசபை மேயர் ஹிட்லர் எனவும், நல்லாட்சி அரசாங்கத்தை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் பதாதைகளை ஏந்தியிருந்ததோடு, கோத்தாபய ராஜபக்ஷவே கொழும்பு நகரைத் தூய்மையாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றவாறு கோஷங்களையும் எழுப்பினர்.

அதன்போது பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஷர்மிலா ஜயவர்தன கோனவல கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு மாநகரசபையில் பெருமளவு ஊழல்கள் இடம்பெறுகின்றன.

மீத்தொட்டமுல்ல குப்பைமேடு விவகாரம் தொடர்பில் கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலில்லை. மக்களின் வாக்குகள் மூலம் தெரிவாகியுள்ள மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவை செய்வதை நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

Leave a comment