மாகாண சபைகளுக்கு புதிய முறைமையின் கீழ் தேர்தல் நடத்தும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளது. எனினும் குறித்த அறிக்கையின் மீது வாக்கெடுப்பு நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று கூடவுள்ள கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி, கூட்டு எதிரணி உட்பட சிறுபான்மையின கட்சிகள் எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான தமது தீர்மானங்களை நேற்று கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்ததனை அடுத்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இதன்போது சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக சரத் அமுனுகம, தமிழ் முற்போக்கு முன்னணி சார்பாக அதன் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் உட்பட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்.
கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ள எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை மீதான விவாதம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டு எதிரணியும் நேற்றைய பாராளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எடுத்திருந்தன. இதன்படி இரு கட்சிகளும் நேற்று பாராளுமன்ற குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானங்களை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்தன.
அதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு,தமிழ் முற்போக்கு முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக தமது தீர்மானங்களை முன்வைத்திருந்தன.
இதனால் நேற்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை தொடர்பில் இணக்கபாட்டுக்கு வர முடியாத நிலைமை ஏற்பட்டதனை அடுத்து எல்லை நிர்ணய அறிக்கையை வாக்கெடுப்புக்கு விடுவதா? இல்லையா? என்பதனை இன்றைய தினம் காலை கூடி தீர்மானிப்பதற்கு கட்சி தலைவர்கள் முடிவு செய்தனர். இதன்பிரகாரம் இன்று காலை எல்லை நிர்ணய அறிக்கை மீதான வாக்கெடுப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் பாராளுமன்ற ஒழுங்கு புத்தக பதவின் பிரகாரம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

