சொந்த ஆதாயத்துக்காக வக்கீல் கோஹன் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்- டிரம்ப் குற்றச்சாட்டு

381 0

சொந்த ஆதாயத்துக்காக தேர்தலில் முறைகேடு நடந்ததாக வக்கீல் கோஹன் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவதாக டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். 

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அதிபர் தேர்தல் நடந்தது. ஹிலாரி கிளிண்டனும், டிரம்பும் போட்டியிட்டதில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

ஆனால் டிரம்ப் பல்வேறு முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றதாக புகார் கூறப்பட்டது. ஹிலாரி வெற்றியை தடுக்கும் வகையில் கம்ப்யூட்டரில் ஹேக்கிங் உள்ளிட்ட பல தவறுகளை செய்து டிரம்ப் வெற்றி பெற ரஷியா உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் தேர்தலின்போது டிரம்பின் மீது பல பெண்கள் செக்ஸ் குற்றச்சாட்டுகளை கூறினார்கள். அவ்வாறு புகார் கூறிய பெண்களுக்கு பணம் கொடுத்து அவர்களை அமைதிப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அப்போது டிரம்பிடம் வக்கீலாக இருந்த மைக்கேல் கோஹன் செய்ததாகவும் கூறினார்கள்.

இந்த நிலையில் மைக்கேல் கோஹன் மீது நியூயார்க் கோர்ட்டில் இதுசம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மைக்கேல் கோஹன் பெண்களுக்கு பணம் கொடுத்தது உண்மை என்று கூறினார்.

மேலும், தேர்தலின்போது ரஷியா டிரம்புக்கு உதவியது தொடர்பாக பல தகவல்களை கூற இருப்பதாகவும், மைக்கேல் கோஹன் கூறியிருக்கிறார். ஆனால் இந்த விவகாரத்தால் டிரம்ப் பதவிக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

தேர்தல்விதிமுறைகளை மீறி அவர் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி அவரை பதவி நீக்கம் செய்ய வழி உள்ளது. மேலும் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இதுசம்பந்தமாக டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

மைக்கேல் கோஹன் என்மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக தவறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவர் தனக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி கட்டுக்கதைகளை கூறி வருகிறார்.

சில பெண்களுக்கு எனது பெயரில் பணம் கொடுத்தது உண்மை தான். ஆனால் அதற்கும் தேர்தல் பிரசாரத்திற்கும் சம்பந்தம் இல்லை. எனவே நான் தேர்தல் விதிகளை மீறியதாக கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

வக்கீல் கோஹன் டிரம்பின் தனிப்பட்ட வழக்கு விவகாரங்களை கவனிப்பவராக இருந்து வந்தார். அதிபர் தேர்தலின்போது டிரம்புக்காக பல பணிகளை அவர் தான் முன்னின்று செய்தார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலையடுத்து மைக்கேல் கோஹன் டிரம்பிடம் இருந்து விலகிவிட்டார்.

Leave a comment