திருடர்களை தண்டிக்கவில்லை என திருடர்களே அரசாங்கத்தினை தூற்றும் அளவிற்கு தேசிய அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது.
குடும்ப ஏகாதிபத்திய ஆட்சியை வீழ்த்தி மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களின் மத்தியிலே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர் ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு இதுவரை காலமும் நிறைவேற்றப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்.
மாகாண சபை தேர்தல் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் எல்லை நிர்ணய அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. பழைய தேர்தல் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தேர்தல் முறைமையினை கொண்டு வந்தவர்கள் இன்று சில அரசியல் விடயங்களை மையப்படுத்தி மாகாணசபை தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல் திருத்த முறைமைகளை ஆயுதமாக கொண்டு செயற்படுகின்றனர்.
புதிய தேர்தல் முறைமையிலே மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணியினர் அன்று தொடக்கம் இணக்கம் தெரிவித்த வண்ணமே காணப்படுகின்றனர். எல்லை நிர்ணய அறிக்கையும் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நிறைவேற்றப்படுவதற்கு நாம் ஆதரவு வழங்குவோம் .
மக்கள் விடுதலை முன்னணியினர் ஒரு கொள்கையின் நிமித்தமே அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். ஆனால் பிற கட்சிகள் தமது அரசியல் இருப்பினை தக்க வைத்துக் கொள்வதற்காக காலத்திற்கு காலம் தமது கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியினை குறிப்பிடலாம்.
பழைய தேர்தல் முறைமையினை இரத்து செய்து புதிய தேர்தல் முறைமையில் தேர்தல்கள் இடம் பெற வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியே குறிப்பிட்டு புதிய தேர்தல் முறைமையினை ஆதரித்தது. ஆனால் இன்று தேர்தல் மிதான பயத்தினை கொண்டு மாகாண சபை தேர்தலை பிற்போட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது தற்போது ஏற்பட்டுள்ள விரக்தியினை கண்டு அரசாங்கம் அச்சமடைந்தமையினாலே தேர்தல்களை பிற்போடும் நோக்கத்திலே செயற்படுகின்றது.
தேசிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டு மூன்று வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. குடும்ப ஆட்சியை வீழ்த்தி ஜனநாயக அரசாங்கத்தை தோற்றுவிக்கும் நோக்கத்திலே மக்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்படப்பட்ட விடயங்களை நம்பி அரசாங்கத்தை தோற்றுவித்தனர்.
இன்று அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கஙகள் , எதிர்தரப்பினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடு;து வருகின்றனர். எதிர்தரப்பினர் அரசாங்கத்தை பகிரங்கமாக சாடுகின்றனர். திருடர்களை தண்டிக்கவில்லை என்று திருடர்களே தூற்றும் அளவிற்கு அரசாங்கம் இன்று பலவீனமடைந்து காணப்படுகின்றது.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேறாத பொழுது மக்கள் அரசாங்கத்தை விமர்சிக்கும் போது 100 நாள் திட்டத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது என ஜனாதிபதி குறிப்பிடுவதும் கூட்டரசாங்கத்தின் ஒற்றுமையினை நன்கு புலப்படுத்தியது.
குடும்ப ஆட்சியில் காணப்பட்ட குறைப்பாடுகளே தேசிய அரசாங்கத்திலும் காணப்படுகின்றது. 2014ம் ஆண்டு வெளிப்படையாக இடம் பெற்றவை இன்று நல்லாட்சி என்ற பெயரில் இடம் பெறுகின்றது இரண்டு அரசாங்கத்திற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது. மக்களின் வாழ்க்கை செலவுகள் இன்று உயர்வடைந்துள்ளது. பொருளாதார ரீதியில் பாதப்புற்ற நடுத்தர மக்கள் சட்ட விரோத தொழில்களை நாடுகின்றார்கள் இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.
இவ்வாறான குறைப்பாடுகளை வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் சென்று தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலே அரசாங்கம் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் திருத்தங்களை காரணம் காட்டி மாகாண சபை தேர்தலை பிறிபோட முயற்சிகளை மேற்கொள்கின்றது. உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் உரிய காலத்தில் நடத்தாமல் பிற்போட்டமையின் பயனை அரசாங்கம் அனுபவித்தது . இதன் தொடர்ச்சியே மாகாண சபை தேர்தலிலும் கிடைக்கப் பெறும் என்றார்.

