ஜனவரியில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்-அகிலவிராஜ்

258 0

பாராளுமன்றத்தில் நாளை மறு தினம் இடம்பெறவுள்ள விவாதத்தில் எவ்வாறான பதில் கிடைத்தாலும் ஜனவரியில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

தேர்தலை நடத்தும் முறைமை குறித்து கட்சிகளுக்கிடையில் இரு வேறான கருத்துக்கள் நிலவிவரும் நிலையில் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் காலந்தாழ்த்தப்பட்டு வருகின்றன. புதிய தேர்தல் முறைமை தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதத்தின் பிரகாரம் பழைய முறையிலோ புதிய முறையிலோ மாகாண சபை தேர்தலை நடத்துவோம் என உறுதிப்பட அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் நாளை மறு தினம் பாராளுமன்றத்தில்  இடம்பெறவுள்ள விவாதம் தொடர்பில் தெளிவுப்படுத்துகையிலேயே  ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில் ,

“அரசியல் கட்சிகளுக்கிடையில் நிலவும் வேறுப்பட்ட கருத்துக்களே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் கால தாமதம் ஏறப்பட காரணமாகியுள்ளது.எதிர் வரும் வெள்ளிக்கிழமை எல்லை நிர்ணய அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இடம்பெறவுள்ளது. இதில் எவ்வாறான தீர்மானம் கிடைக்கப்பெற்றாலும் கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஜனவரியில் மாகாண சபைகளுக்காண தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொள்ளுவோம்.

முன்னர் இருந்தது போன்று பழைய விகிதாசார தேர்தல் முறைமையிலோ அல்லது உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் நடைப்பெற்றதைப் போன்று புதிய முறைமையிலோ மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெரும்.

எல்லை நிர்ணய அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் புதிய தேர்தல் முறைமைக்கு சாதகமாக இருக்குமாயின் புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

மாறாக விவாத தீர்மானங்கள் புதிய முறைமைக்கு பாதகமாகவும் பழைய முறைமைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமையுமாயின் பழைய முறையிலேயே தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது. எது எவ்வாறாயினும்,  மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

Leave a comment