அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும்-மொஹான் சமரநாயக்க

240 0

“அரசாங்கம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில்  பழங்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் பழவகைகள் மற்றும் விவசாயப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதாகவும் பிரதமர் கூறுகின்றார். இறக்குமதிகளுக்கான வரியை நீக்குவதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியின் அளவு வீழ்ச்சியடையும். இவ்வாறான செயற்பாடுகளால் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றார்கள்” என மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

தற்போது நாடு மற்றும் நாட்டிலுள்ள விவசாயிகளின் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தினால் ராஜகிரியவில்  உள்ள அவர்களது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்தவொரு நாடும் நிலை பேறான அபிவிருத்தியடைய வேண்டுமாயின் பொருளாதார அபிவிருத்தி அவசியமானதாகும். அதற்கு விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் தற்போதைய அரசாங்கம் விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றனர். இதனால் விவசாயிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பழங்கள் பயிர்ச்செய்வதனை ஊக்குவிப்பதாக பிரதமர் கூறுகின்றார். ஆனால் சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இறக்குமதிகளுக்கான வரி பூச்சியமாக்கப்பட்டுள்ளது. இறக்குமதிகளுக்கு வரி அறவிடாமல் எவ்வாறு உள்நாட்டு  பயிர்ச்செய்கையினை ஊக்குவிக்க முடியும்?

இராணுவத்தினர் யுத்தக்குற்றத்தில் ஈடுபட்டனர் என சர்வதேசத்திடம்  ஏற்றுக்கொள்ளல், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கல், தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தல் போன்ற   செயற்பாடுகளிலேயே இந்த நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. மக்களின் நலன்கருதி எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாராளமயமாக்கல் மற்றும் பூகோளமயமாக்கல் கொள்கையினைக் கடைப்பிடித்து வருகின்றார். ஆனால் அதன்மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வதனை விடுத்து, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும்  தீங்கான செயற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் இன்னும் சில வருடங்களில் நாடு பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்” என்றார்.

Leave a comment