ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து முடிவு செய்யக் குழு!

215 0

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து முடிவு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், அரசியல் காரணங்களுக்காகவே ஆலை மூடப்பட்டதாக கூறினார். ஆலையில் பல்வேறு அமிலங்கள் இருப்பதாகவும், முறையாக பராமரிக்கப்படவில்லை என்றால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகனா, ஆலையினால் மாசு ஏற்படுவதாலேயே மூடப்பட்டதாக தெரிவித்தார்.‌ ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதி அளிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

ஸ்டெர்லைட்டினால் மாசு ஏற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், கூடுதல் அவகாசம் கோரிய தமிழக அரசின் வேண்டுகோளை நிராகரித்தனர். ஆலையை திறப்பது குறித்து முடிவு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்டனர். இரண்டு வாரத்தில் குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அதன் பின்னர் 4 வாரத்தில் ஆலையை திறப்பது குறித்து அந்தக் குழு முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர். அதுவரை ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வழங்கப்பட்ட அனுமதி தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்த மே மோதம் 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

Leave a comment