அமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த மாதம் பாகிஸ்தான் பயணம்!

193 0

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அடுத்த மாதம் (செப்டம்பர்) பாகிஸ்தான் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான்-அமெரிக்கா உறவில் லேசான விரிசல் நிலவி வருகிறது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதாக பாகிஸ்தானை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் டிரம்ப், அந்த நாட்டு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

பயங்கரவாதிகள் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் நடந்து கொள்ளவில்லை என கடந்த ஜனவரி மாதம் குற்றம் சாட்டிய டிரம்ப், வெறும் பொய்யும், ஏமாற்று நடவடிக்கைகளிலேயே அந்த நாடு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சாடினார். அத்துடன் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ராணுவ நிதியுதவியை குறைக்க வகை செய்யும் மசோதா ஒன்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் இவ்வாறு விரிசல் ஏற்பட்டு இருந்த நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் நேற்று முன்தினம் பதவியேற்று உள்ளார். அவர் அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதற்கு முன்வந்துள்ளார். கடந்த மாதம் தனது வெற்றி உரையில்கூட இதை குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் அமெரிக்காவும், பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு உள்ளது. குறிப்பாக இம்ரான்கானின் பதவியேற்பை வரவேற்றுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானின் வளம் மற்றும் அமைதி மேம்பாட்டுக்காக புதிய ஜனநாயக அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடக்கத்தில் பாகிஸ்தான் வருவதாக பாகிஸ்தானின் ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. அதன்படி செப்டம்பர் 5-ந்தேதி பாம்பியோவின் இஸ்லாமாபாத் பயணம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் வரும் மைக் பாம்பியோ புதிய பிரதமர் இம்ரான்கானை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் அமைதி நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் ஆதரவு குறித்தும் மைக் பாம்பியோ பேசுவார் என கூறப்படுகிறது.

இதன் மூலம் இம்ரான்கானை சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் என்ற சிறப்பை மைக் பாம்பியோ பெறுகிறார். அவருடன் அமெரிக்காவின், தெற்கு ஆசியா விவகார துறைக்கான தலைவர் ஆலிஸ் வெல்ஸ் அடங்கிய உயர்மட்டக்குழுவினரும் பாகிஸ்தான் வருகின்றனர்.

இதற்கிடையே பாகிஸ்தானின் புகழ்பெற்ற பஞ்சாப் மாகாண சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அந்த மாகாண முதல்-மந்திரியாக உஸ்மான் பஸ்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a comment