வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் – முதல்வர் பழனிசாமி

382 0

ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் கரையோரம் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோடு மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பவானி, கருங்கல்பாளையம், குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பவானியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்கள் வழங்கினர். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பாவனி, காவிரி ஆற்று வெள்ளத்தால் 50 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7832 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் – 3375 பேர், பெண்கள் – 3133 பேர், குழந்தைகள் – 1324 பேர் ஆவார்கள்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு தேவையான பால், ரொட்டி வழங்கப்படுகிறது. பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகிறது. மேலும் மின்சார வசதி, கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1976, முழுவதும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 263, பாதியளவு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை – 114, தண்ணீர் புகுந்து மூழ்கிய வீடுகளின் எண்ணிக்கை – 1599.

வெள்ளத்தால் 806 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மொத்த பரப்பு – 609.69.0 ஹெக்டேர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்த பிறகு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படும்.

தமிழகத்தில் ஏரிகள் குளங்கள் தூர் வாரவில்லை என்று கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. ஏரி குளங்கள் தூர் வாரப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1511 ஏரிகள் கண்டறியப்பட்டு அங்கு தூர் வார ரூ.328 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1819 ஏரிகளில் மராமத்து பணிகள் நடந்துள்ளது. ஏரிகளில் பராமத்து பணிகள் செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமை பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இதற்கான பணிகளை செய்வார்கள்.

நமது மாநிலத்தில் ஓடும் காவிரி ஆறு சமநிலை பகுதி ஆகும். இங்கு தடுப்பணை கட்டுவது சவாலானது. இருந்தாலும் ஜெயலலிதா காலத்தில் கொள்ளிடம், ஆதனூர், குமாரமங்கலத்தில் 400 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் முயற்சி நடந்தது. ஆனால் அங்கு நிலங்கள் கையகப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அப்பணி நிற்கிறது.

பவானி ஆற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பினால் தான் பவானியில் இவ்வளவு வெள்ள சேதங்கள் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இது தவறு. நான் பவானி பகுதியில் சுற்றி வளம் வந்தவன் தான். அப்படி எல்லாம் எதுவும் இல்லை.இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a comment