ராகுல் காந்தி பாதுகாப்பில் குறைபாடு: விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

191 0

கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற ராகுல் காந்திக்கு பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 7-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி மறைந்தார். மறுநாள் ராஜாஜி ஹாலில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தார். அப்போது அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. கடும் நெரிசலில் சிக்கிக்கொண்டார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. காவல்துறையின் அஜாக்கிரதையால் தனி பாதுகாப்பு வளையம் இல்லாமல் பொதுமக்களுக்கிடையில் புகுந்து செல்ல வேண்டிய நிலை எழுந்தது.

இது குறித்து நீதிவிசாரணை கேட்டு வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் தேசிய கட்சிகளைச் சேர்ந்த ராகுல் காந்தி, சரத்பவார், சீதாராம் யெச்சூரி, அகிலேஷ் யாதவ், தேஜ் சிங் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், பரூக் அப்துல்லா போன்ற பெரிய தலைவர்கள் வரும்போது பாதுகாப்பு நடவடிக்கை சரியாக இருக்க வேண்டும்.

ஆனால் இதில் ஏற்பட்ட அலட்சியம், முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு குறைபாடு என்பது பெரும் ஆபத்தை விளைவித்துவிடும் என்று தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், பாதுகாப்பு குறைபாடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய மாநில அரசுகளின் உள்துறை செயலாளர்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a comment