மஹிந்த தலைமையில் ஆட்சியை கைப்பற்றி அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவோம்-ஜீ.எல்.பீரிஸ்

222 0

மஹிந்தவின் தலைமையில் அடுத்த வருடம் ஆட்சியை கைப்பற்றி, ஒரு மாத காலத்துக்குள் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வந்து பிணைமுறி மோசடி தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதாக இருப்பின் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அவரை நாட்டுக்கு கொண்டு வராது முழுமையான விசாரணை நடத்துவது சாத்திமற்றது. அவரை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

அவர் நாட்டுக்கு வந்து நீதிமன்றத்தின் முன்னிலையில் சாட்சியமளிப்பாராயின் அதன் மூலம் இந்த அரசாங்கத்தின் தலைவர்களுக்கு பாரிய சிக்கல் ஏற்படலாம்.

இருந்தபோதிலும் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அவரை நாட்டுக்கு அழைத்து வருவோம். அவரை நாட்டுக்கு அழைத்து வருவது அவ்வளவு பாரிய சிக்கலுக்குரிய விடயமல்ல. அரசாங்கம் உத்தியோகபூர்மாக சிங்கப்பூர் அரசாங்கத்திடம் மகேந்திரனை நாட்டுக்கு அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்குமாயின் சிங்கப்பூர் அரசாங்கம் ஒருபோதும் அந்த கோரிக்கையை நிராகரிக்கப்போவதில்லை.

எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று முறை சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதும் அந்தக் கோரிக்கையை அவர் விடுக்கவில்லை. எனவே அவரை அங்கு தங்க வைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வருடம் ஆட்சியைக் கைபற்றுவார். ஆட்சியைக் கைப்பற்றிய ஒரு மாத காலத்திற்குள் அர்ஜுன மகேந்திரனை நாட்டு அழைத்து வந்து பிணைமுறி மோசடி தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்போம் என்றார்.

Leave a comment