மன்னாரில் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் எதிர்வரும் ஒரு வராத்திற்கு இடைநிறுத்தம் (காணொளி)

316 0

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வரை குறித்த அகழ்வு பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மன்னார் சதொச வளாகத்தில் தற்போதுவரை 52 நாட்கள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுள்ளதோடு 66 மனித எலும்புக்கூடுகள் இதன்போது அடையாளம் காணப்பட்டிருந்தன.
அவற்றில் 56 மனித எலும்புக்கூடுகள் வெளியே எடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் வாரநாட்களான திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்களில் மாத்திரம் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை எலும்புக்கூடு அகழும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகழ்வுப் பணிகள் எதற்காக இடை நிறுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பில் எந்தக் காரணமும்; தெரிவிக்கப்படவில்லை.
குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது, குறித்த வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், குறித்த மண்ணிலிருந்து சந்தேகத்திற்கு இடமான எலும்புகள் காணப்பட்டதையடுத்து ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தின் கட்டுமாணப்பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment