இறந்த குட்டியை தூக்கி சுமந்த தாய் திமிங்கலம்!

236 0

உலகம் பூராவும் மாறாததும், மறையாததும், மங்காததும் = தாய்மை ஒன்றுதான். அது மனிதர்கள் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் பிறவியிலேயே கிடைத்த அருட்கொடை.தான் சுமந்து பெற்றதை பாதுகாக்கும் போதாகட்டும் அல்லது பெற்றதை இழந்த போதாகட்டும், தாய்மையின் வலியை சொல்ல முடியாது. உணர மட்டுமே முடியும். அப்படி ஒரு ஜீவனின் பாசப்போராட்டம் இது.

அமெரிக்காவில் உள்ள மாகாணம் ஹவாய். இங்கு ஒரு திமிங்கலம் ஒரு குட்டியை ஈன்றது. அந்த குட்டி பிறந்ததிலிருந்தே அதனுடன் தாய் திமிங்கலம் துள்ளி குதித்து விளையாடியது. சிறிது நாளிலேயே அந்த குட்டி திமிங்கலம் திடீரென இறந்துவிட்டது. ஏன் இறந்துவிட்டது என்றே தெரியவில்லை. ஆனால், இதனை அந்த தாய் திமிங்கலத்தால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. சோகம் நிறைந்து வழிந்தது. கூடவே இருந்த தன் குட்டி இறந்துவிடவும் அதை விட்டு செல்லவும் முடியவில்லை.

அதனால் குட்டியை தன் மேலேயே போட்டு சுமந்தது. சுமந்து கொண்டு எங்கு செல்வது என்றும் தெரியவில்லை. தீராத துன்பத்துடன் கடலையே சுற்றி சுற்றி வந்தது. எவ்வளவு நேரம் தன் குட்டியை சுமந்து திரிந்தது தெரியுமா? ஒன்றல்ல, இரண்டல்ல, 17 நாட்கள் இப்படியே சுற்றி வந்தது. அதாவது 1,600 கிலோ மீட்டருக்கு மேல் குட்டியை சுமந்தபடி நீந்தி வந்துள்ளதாக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக திமிங்கலம் இரண்டு வாரம் தான் குட்டியுடன் திரியுமாம். ஆனால் தவித்தபடி கடலையே சுற்றி சுற்றி வந்ததன் மூலம் இந்த திமிங்கலம் புதிய சாதனை படைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். என்னதான் சாதனை படைத்தாலும் 17 நாள் பாசப்போராட்டத்துக்கு ஈடாகுமா அதெல்லாம்? தாய்மையின் முன் எது நின்றாலும் அது தூள் தூளாக காணாமல்தான் போகும்

Leave a comment