திண்டுக்கல்லில் நள்ளிரவில் ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பணம் எரிந்து நாசமானது. நகரின் முக்கிய பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. 2 எந்திரங்கள் உள்ள இந்த மையத்தில் எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அருகில் வணிக வளாகங்கள், பள்ளி உள்ளிட்டவை இருப்பதால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இந்த சாலையில் அதிகம் சென்று வருகின்றனர்.
எனவே இப்பகுதி எப்போதுமே பரபரப்பாக காணப்படும். அரசு ஊழியர்கள், மாத சம்பளம் வாங்குபவர்கள் அதிக அளவில் இந்த ஏ.டி.எம். மைய எந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு சமயத்தில் இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனை பார்த்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதும் ஏ.டி.எம். எந்திரங்கள் மற்றும் அதில் இருந்த பணம் எரிந்து நாசமானது.
முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்தது தெரிய வந்தது. இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. காற்றின் வேகமும் குறைவாக இருந்ததால் தீ மேலும் பரவவில்லை. அருகிலேயே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த தீ அங்கு பரவி இருந்தால் பெரும் விபத்து நடந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து தவிர்க்கப்பட்டது.
இது குறித்து மின் ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து அதனை சீரமைத்தனர். வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டனர். எரிந்த பணத்தின் மதிப்பு குறித்து கணக்கிடப்படும் என அவர்கள் தெரிவித்தனர். நகரின் முக்கிய பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

