நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், “சுவாசித்து மூன்று ஆண்டுகள்” என்ற தொனிப்பொருளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பொதுமக்களிடம் கையளிக்கும் செயற்பாடுகள் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளன.
இந்த அபிவிருத்திப்பணிகளின் முதற்கட்டமாக இன்று நுவரெலியா மாவட்டத்திலுள்ள பூண்டுலோயா, டன்சினன் தோட்டங்களில் சொந்த வீடுகள் இன்றிக் கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் பொதுமக்களுக்கு பிரதமரின் தலைமையில் 404 வீடுகள் வழங்கப்படவுள்ளன. இதனையடுத்து எதிர்வரும் 17 ஆம் திகதி மொனராகலை, தெவிபுத்கமை கிராமத்தில் 52 வீடுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொது மக்களிடம் கையளித்து வைப்பார்.
15,500 மில்லியன் ரூபா செலவில் குருணாகலையில் நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் சுகாதார சேவைகள் உள்ளடங்கலான வேலைத்திட்டத்தை நாளை 13ஆம் திகதி பிரதமர் திறந்துவைப்பார். இதேவேளை, அவரின் தலைமையின் கீழ் நாளை மறுதினம் 14 ஆம் திகதி அநுராதபுரம் மஹாவிகாரையின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்துவைக்கப்படும் அதேவேளை அங்கு நினைவுத்தூபி மற்றும் குளமும் திறந்து வைக்கப்படவுள்ளன.
இந்தநிலையில், காணி உரிமை இல்லாத பொதுமக்களுக்கு காணியின் உரிமையை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை இரத்தினபுரியில் இடம்பெறவுள்ளது. இரத்தினபுரி நகரசபை மைதானத்தில் இடம்பெறும் இந்த வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் 2000 காணி உரிமைகள் வழங்கப்படவுள்ளன.
இரத்தினபுரியைத் தொடர்ந்து 18ஆம் திகதி தெனியாய, பஸ்கொடை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் வைத்து 1000 காணி உரிமைகளும், 19ஆம் திகதி கேகாலையில் 2500 காணி உரிமைகளும், எதிர்வரும் 21 ஆம் திகதி பத்தேகமையில் 4000 காணி உரிமைகளும் பிரதமரினால் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை 4130 பட்ட தாரிகளுக்கான அரச தொழில் நியமனங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி அரலி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப் படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

