புளியங்குளம் மைதானத்தை வடக்கு பிரதேச சபை கையகப்படுத்த முயற்சி

221 0

வவுனியா, புளியங்குளம் பகுதியில் சிறப்பாக செயற்பட்டு வரும் புரட்சி விளையாட்டுக் கழகத்தின் மைதானத்தை வவுனியா வடக்கு பிரதேச சபை கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் சபை அமர்வில் பேசுவதற்கும், பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு சபை தலைவர் ச.தணிகாசலம் அனுமதி வழங்க மறுத்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2002 ஆம் ஆண்டு முதல் புரட்சி விளையாட்டுக் கழகம் புளியங்குளம் சந்தியில் அமைந்துள்ள குறித்த  மைதானத்தை சிறப்பாக பராமரித்து பயன்படுத்தி வந்தனர். அந்த மைதானம் மீள் குடியேற்றத்தின் பின்னர் புளியங்குளம் பொலிஸாருடைய கட்டுப்பாட்டிலிருந்த போது இக்கிராமத்தின் இளைஞர்களின் முயற்சியால் குறித்த மைதானம் விடுவிக்கப்பட்டது.

ஆனால் குறித்த மைதானத்தை பொலிஸாரிடமிருந்து விடுவிப்பதற்கு அதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளாத பிரதேச சபை இளைஞர்களது முயற்சியினால் குறித்த மைதானம் பொலிஸாரிடமிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அதனை கைப்பற்ற நினைப்பது நியாயமானதா? என இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் புரட்சி விளையாட்டுக் கழக இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் து.தமிழ்செல்வன் சபை அமர்வில் பேசுவதற்கு முயன்ற போதும் அவரை பேசவிடாது சபைத் தலைவர் ச.தணிகாசலம் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளதாகவும் இளைஞர்கள் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a comment