சட்ட நுணுக்கங்களை வடமாகாண மக்களுடைய நலன்களுக்காக என்றாவது நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்களா?

286 0

வடமாகாண அமைச்சர்சபை விடயத்தில் சட்டத்தரணிகளான மாகாணசபை உறுப்பினர்கள் சட்ட நுணுக்கங்களை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இதே சட்ட நுணுக்கங்களை வடமாகாண மக்களுடைய நலன்களுக்காக என்றாவது நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்களா? பயன்படுத்தியிருந்தால் இயன்றளவும் எங்களுடைய மக்கள் எவ்வளவு நலன்களை பெற்றிருப்பார்கள்? என வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் தெரிவித்திருந்தார்.

வடமாகாணசபையின் 129ஆவது அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே மாகாணசபை உறுப்பினர் வி. தவநாதன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாணசபை ஆளுங்கட்சிக்குள் இன்று உருவாகியிருக்கும் சகல குழப்பங்களுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசு கட்சியின் தலைவர்களே காரணம். குறிப்பாக அவர்களே ஆட்களை நியமனம் செய்துவிட்டு அவர்களே விமர்சனம் செய்வதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது.

ஆயுதப் போராட்டத்தின் விளைவாக கிடைத்த சொற்ப வரப்பிரசாதங்களை கொண்ட வடமாகாண சபையையும் போட்டுடைத்த பெருமையும் அவர்களை சாரும். இன்று மாகாண அமைச்சர்கள் விடயத்தில் பல சட்ட நுணுக்கங்களை எடுத்துப் பேசுகிறார்கள். அதேசமயம் இன்று வடக்கில் மக்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் உள்ளது.

இன்று இந்த அவையில் அமைச்சர்கள் விடயம் குறித்து சட்ட நுணுக்கங்களை எடுத்துப் பேசும் சட்டத்தரணிகள் மக்களுடைய நலன்கள் சார்ந்து எதாவது பேசியிருக்கிறீர்களா? மக்களுடைய நலன்களுக்காக இவ்வாறு பேசியிருந்தால், மக்களுடைய நலன்களுக்காக இவ்வாறு செயற்பட்டிருந்தால் இன்று மக்கள் பல நன்மைகளை பெற்றிருப்பார்கள்.

குறித்த அமைச்சர்கள் விடயம் தொடர்பாக பேசி ஒரு தீர்வினை பெறாமல் சபையை நடாத்தாதீர்கள். ஏற்கெனவே பல இலட்சம் பணத்தை செலவிட்டாயிற்று இனியும் அதனை செய்யாதீர்கள் என்றார்.

Leave a comment