துப்புரவுத் தொழிலாளிக்குப் பிறந்தநாள் கொண்டாடி அசத்திய மருத்துவமனை!

283 0

 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. இங்கு, 30-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களில் முத்துச்சாமியும் ஒருவர்.  முத்துச்சாமி, சவால் நிறைந்த உடல்கூறு ஆய்வுப் பிரிவில் பணிபுரிந்துவந்தார். இந்த மாதத்துடன் முத்துச்சாமி பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார். இதையடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை டாக்டர் எஸ்.சேரலாதன், அவரின் பணிக்காலம் குறித்த ஆவணங்களை எடுத்து வருமாறு கூறுனார். ஆதார் கார்டை பார்த்தபோது, இன்று முத்துச்சாமியின் 60-வது பிறந்தநாள் என்று தெரியவந்தது.துப்புரவுத் தொழிலாளி

இதையடுத்து, பணியிலிருந்து ஓய்வுபெறும் முத்துச்சாமியின் பிறந்தநாளைக் கொண்டாட டாக்டர் சேரலாதன் முடிவுசெய்தார். சிறிய கேக் ஒன்று உடனடியாக ஆர்டர் செய்யப்பட்டது. டாக்டர் முன்னிலையில் முத்துச்சாமி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். முத்துச்சாமிக்கு டாக்டர் சேரலாதன், செவிலியர் சாரதாமணி உள்ளிட்டோர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர்.

துப்புரவுத் தொழிலாளி

துப்புரவுத் தொழிலாளியை ஊக்கப்படுத்திய டாக்டர் சேரலாதனைத் தொடர்புகொண்டபோது, ”இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. சக மனிதர்களை மதிக்கத் தெரிந்தால் போதும். அவரோட பிறந்த நாளே அவருக்குத் தெரியவில்லை. அந்தளவுக்கு வெள்ளந்தி மனிதர்கள். இவ்வளவு ஆண்டுக்காலம் முத்துச்சாமி எங்களோட சேர்ந்தே பணி புரிந்தார். ஓய்வு பெற உள்ள நிலையில் அவரை சந்தோஷப்படுத்த நினைத்தேன். முத்துச்சாமி உடல் கூறு ஆய்வுப் பிரிவில் இருப்பவர். இந்தப் பணியில் இருப்பவர்களின் கஷ்டம் எங்களுக்குத் தெரியும். முகத்தைச் சுழிக்காமல் எந்த நேரமும் தன் பணியில் ஈடுபட அவர் தயராக இருப்பார். 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கிட்டத்தட் 30 வருஷம் சேவை செய்துள்ளார். ஓய்வு பெறும் அவருக்கு மாவட்ட ஆட்சியர் கையால் விருது பெற வேண்டும் என்பது ஆசை. இந்தச் சுதந்திர தின விழாவின்போது சிறந்த பணியாளர் விருதுக்கு அவரின் பெயரை பரிந்துரை செய்துள்ளேன்” என்றார்.

முத்துசாமியிடம் பேசியபோது, வாழ்க்கைல முதன்முறையா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறேன்’ என்கிறார். துப்புரவுத் தொழிலாளியின் பிறந்தநாள் கொண்டாடிய டாக்டர் மற்றும் செவிலியர்களை மக்கள் மனதார பாராட்டினர்.

Leave a comment