சுழிபுரம் சிறுமி படுகொலை; சாட்சியங்கள் பதிவு

313 0

சுழிபுரம் காட்டுப்புலம் சிறுமி படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டது.

சுழிபுரம் காட்டுபுலத்தை சேர்ந்த ஆறு வயது பாடசாலை சிறுமி கடந்த ஜூன் மாதம் 25ஆம் பாடசாலை சென்று மீண்டும் வீடு திரும்புகையில் கடத்தப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொல்லப்பட்ட பின்னர் அவரது சடலம் கிணற்றில் வீசப்பட்டு இருந்தது.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகத்தில் ஐந்து பேரை கைது செய்தனர். அதில் ஒருவர் தானே இக் கொலையை செய்ததாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்ததை அடுத்து , ஏனைய நால்வரையும் பொலிஸார் விடுவித்திருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் குறித்த வழக்கு தொடர்பில் இருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர். குறித்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் , நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது சந்தேக நபர்கள் மூவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , சிறுமியின் உறவினர் ஒருவர் மன்றில் தனது வாக்குமூலத்தை வழங்கினார்.

சிறுமியின் உடல் மீட்கப்பட்ட கிணற்றடியில் , அன்றைய தினம் உடுப்பு தோய்த்துக்கொண்டு இருந்த போது , அந்த வழியால் நால்வர் சென்றதை அவதானித்தேன். அவர்களை எனக்கு நன்கு தெரியும் அவர்களில் மூவரின் பெயர்களும் தெரியும் என பெயர்களை கூறினார்.

அவர்கள் மூவரில் இருவர் எதிரே சந்தேகநபர்கள் கூண்டில் நிற்கின்றார்கள் என அவர்கள் இருவரையும் அடையாளம் காட்டினார்.

அதனை தொடர்ந்து சிறுமியின் நண்பி ஒருவரும் மன்றில் வாக்கு மூலம் அளித்தார்.

இருவரின் வாக்கு மூலங்களும் பெறப்பட்ட பின்னர், குறித்த வழக்கை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அன்றைய தினம் வரையில் சந்தேக நபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதேவேளை குறித்த வழக்கின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்படவில்லை என கடந்த தவணை சிறுமியின் உறவினர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கே. சுகாஸ் மன்றில் சுட்டி காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment