திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
கருணாநிதி உடலுக்கு கோபாலபுரம் இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பிறகு சிஐடி காலனி வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஏராளமான தொண்டர்கள் ஆம்புலன்சின் முன்னும் பின்னும் கட்சிக் கொடிகள் ஏந்தியபடி கண்ணீருடன் நடந்து சென்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா இருந்தபோது கழகம் காத்திட இருந்த தம்பிகள் எம்.ஜி.ஆரும் கலைஞரும். அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு. எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கத்துக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே. எம்.ஜி.ஆர். இருந்து கலைஞர் இறந்திருந்தால், கண்டிப்பாய் அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார் என தெரிவித்துள்ளார்.

